மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

ரஃபேல் ஊழல் : காங்கிரஸ் போராட்டம்!

ரஃபேல் ஊழல் : காங்கிரஸ் போராட்டம்!

ரஃபேல் போர் விமான பேர ஊழலைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈரோட்டில் இன்று (செப்டம்பர் 14) போராட்டம் நடைபெற்றது.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் இந்த ஒப்பந்தம் மாற்றி அமைக்கப்பட்டு, புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக பாஜக அரசு மீது தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அதிக தொகை கொடுத்து விமானத்தை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், ரிலையன்ஸ் நிறுவனத்துக்குச் சாதகமாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் நேற்று பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், “இந்தியாவில் ரஃபேல் போர் விமானங்களைத் தயாரிக்க வேண்டுமானால், அதன் தரம் குறித்து உத்தரவாதம் வழங்க வேண்டும். ஆனால் ஹிந்துஸ்தான் நிறுவனம் உத்தரவாதங்களை கொடுக்கத் தவறியது. இதனால், ஹிந்துஸ்தான் நிறுவனத்துடன் டஸால்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எனவே காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் கைவிடப்பட்டது” என்று கூறியுள்ளார்.

“காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட விலையுடன் ஒப்பிடுகையில் 9 சதவீதம் குறைவான விலையிலேயே ரஃபேல் போர் விமானங்கள் தற்போது வாங்கப்படுகின்றன” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே ரஃபேல் போர் விமான பேர ஊழலைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சியினர் அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று (செப்டம்பர் 14) காலை ஈரோட்டில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், “ரஃபேல் ஒப்பந்தத்தில் ஒரு விமானத்துக்குக் கூடுதலாக 1100 கோடி ரூபாய் கொடுத்திருக்கின்றனர். அந்த பணம் மீண்டும் இவர்களுக்கு லஞ்சமாக வர போகிறது. ஊழல் இல்லாத அரசை அமைப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த மோடியின் ஆட்சியில் ராணுவ தளவாடங்கள், விமானங்கள் வாங்குவதிலேயே ஊழல் நடக்கிறது. இதைக் கேட்டால், நாங்கள் வாங்கும் விமானத்தில்தான் ராணுவ தளவாடங்கள் உள்ளன, காங்கிரஸ் ஆட்சியில் ஒப்பந்தம் செய்யப்பட்ட விமானங்களில் ராணுவ தளவாடங்கள் இல்லை என்று பொய் கூறுகின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் வாங்கவிருந்த விமானத்திற்கும் தற்போது வாங்க போகும் விமானத்திருக்கும் 1100 கோடி ரூபாய் கூடுதல் விலை என்பது மட்டும்தான் வித்தியாசமே தவிர வேறு எந்த வித்தியாசமும் இல்லை. பாஜகவினர் நாடகமாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் சுய ரூபத்தை மக்களிடம் எடுத்துச் சொல்வதற்கு நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் போராட்டம் நடத்துகிறோம் என்று கூறியுள்ளார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், விமானத்தின் விலை ரகசியம் காக்கப்படவேண்டியது அதைச் சொல்லமுடியாது என்று கூறுகிறார். விமானத்துக்கு என்ன சக்தி, எவ்வளவு உயரத்தில் பறக்கும், எவ்வளவு வேகமாகச் செல்லும் என்பதை வேண்டுமானால் சொல்லக்கூடாதே தவிர அதன் விலையைச் சொல்வதில் எந்தவிதமான சட்ட சிக்கலும் இல்லை என்று குறிப்பிட்டார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

இதுபோன்று, புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் ரஃபேல் ஊழலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம், பேரணி நாளை (செப்டம்பர் 14) நடைபெறும் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவரும், பொதுப் பணித் துறை அமைச்சருமான ஆ.நமச்சிவாயம் கூறியுள்ளார்.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon