மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 10 ஆக 2020

மம்தாவின் அமெரிக்கப் பயணம்: தடுத்து நிறுத்திய ஆர்எஸ்எஸ்?

மம்தாவின் அமெரிக்கப் பயணம்: தடுத்து நிறுத்திய ஆர்எஸ்எஸ்?

பாஜக, ஆர்எஸ்எஸ்ஸின் அழுத்தத்தாலேயே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அமெரிக்காவில் விவேகானந்தர் விழாவில் கலந்துகொள்ள முடியாமல் போனது என்று திருணாமூல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாற்றியதன் 125ஆவது ஆண்டு நிறைவு தினம் செப்டம்பர் 11ஆம் தேதி சிகாகோவில் விவேகானந்தா வேதாந்த சொசைட்டி அமைப்பின் சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொள்ள வேண்டி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு அனுப்பினர். அதை மம்தாவும் ஏற்றுக்கொண்டு அமெரிக்கப் பயணத்துக்கு தயாரானார். ஆனால் கடைசி நேரத்தில் மம்தா கலந்துகொள்ளும் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர். இதனால் மம்தா அமெரிக்கப் பயணத்தை ரத்து செய்தார்.

இந்த விவகாரம் குறித்து நேற்று (செப்டம்பர் 13) பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய திருணமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் டெரிக் ஒ பிரெய்ன், “விவேகானந்தா வேதாந்த சொசைட்டி ஏற்கெனவே மம்தா பானர்ஜிக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், அதன் பிறகு பாஜக - ஆர்எஸ்எஸ்ஸின் கடுமையான அழுத்தத்துக்கு அடிபணிந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே, மம்தா பானர்ஜியின் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டனர்.

சிகாகோவில் குளோபல் ஹிந்து காங்கிரஸ் என்ற அமைப்பின் சார்பில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியைத் தாண்டி வேறு நிகழ்ச்சிகள் உலகின் கவனத்தை ஈர்த்துவிடக் கூடாது என்று திட்டமிட்டு மம்தா பானர்ஜியின் நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே மம்தா பானர்ஜி இதுகுறித்து, “எனது அமெரிக்கப் பயணத்தை தடுத்து நிறுத்தியதற்குப் பின்னால் நாகரிகமற்ற சதி நடந்திருக்கிறது. நான் ராமகிருஷ்ண மடத்தைக் குறை சொல்ல மாட்டேன். ஆனால், அவர்கள் கடுமையான அழுத்தத்துக்கு ஆளாகியிருப்பது தெரிகிறது” என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் ரவீஷ்குமார் , “மம்தா பானர்ஜி சிகாகோ பயணம் செல்வது பற்றி எந்த விண்ணப்பமும் பெறப்படவில்லை’’ என்று தெரிவித்திருந்தார்.

இதுபற்றி பிரெய்னிடம் கேட்கப்பட்டபோது, “இந்த விவகாரத்தில் வெளியுறவுத் துறை அமைச்சகம் உண்மைக்கு மாறான வாதத்தை வைக்கிறது” என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே மம்தா பானர்ஜியின் சீனப் பயணம் கடந்த ஜூன் மாதம் திட்டமிடப்பட்டு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon