மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 29 நவ 2020

சென்னை : வடிகால்களை விரைவில் தூர்வார வலியுறுத்தல்!

சென்னை : வடிகால்களை விரைவில் தூர்வார வலியுறுத்தல்!

சென்னையில் மழைநீர் வடிகால்களைத் தூர்வாரும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில் சென்னையில், மழைநீர் வடிகால்களைத் தூர்வாரி, சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (செப்டம்பர் 14) வெளியிட்டுள்ள அறிக்கையில், “2015ஆம் ஆண்டு மழை வெள்ளத்தில் சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது” என்று கூறியுள்ளார். .

“தமிழ்நாட்டில் எங்குமே தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மாநகராட்சி என்ற அமைப்பு இருக்கிறதா? என்று சந்தேகிக்கும் நிலையில் தான் அதன் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. சென்னையில் கடந்த ஆண்டு பெய்த மழையில் சேதமடைந்த மாநகராட்சி சாலைகள் இன்று வரை சீரமைக்கப்படவில்லை. ஆனால், பல இடங்களில் ஒரே ஆண்டில் பல முறை சாலைகள் போடப்பட்டதாகக் கணக்கு காட்டி மக்களின் வரிப் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

“சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 1850 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் தூர்வாரி, சீரமைக்கப் பட வேண்டும். ஆனால், இவற்றில் பாதியளவுக்குக் கூட இன்னும் சரி செய்யப்படவில்லை. பல இடங்களில் இப்போது தான் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. சென்னையில் எந்த இடத்தில் எடுத்துக் கொண்டாலும் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் பயணம் செய்தால் மழை நீர் வடிகால் பணிகளுக்காக சாலைகளும், தெருக்களும் பள்ளம் தோண்டிச் சிதைக்கப்பட்டிருப்பதை காண முடியும். மழை நீர் வடிகால் பணிகள் பருவமழை தொடங்குவதற்குள் முடிவடைந்து விடும் என மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்துள்ள போதிலும் அது சாத்தியமானதாகத் தோன்றவில்லை” என தெரிவித்துள்ளார்..

“மழைநீர் வடிகால்களை விட மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை ஆக்கிரமிப்புகள் தான். பாரம்பரியமாக நீர் வடியும் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் மழை நீர் வடிய வாய்ப்பே இல்லை. சென்னையில் அரை மணி நேரம் மழை பெய்தால் கூட முக்கியச் சாலைகள் வெள்ளக்காடாக மாறுவதற்குக் காரணம் இந்த ஆக்கிரமிப்புகள் தான். இவற்றை அகற்றும்படி சென்னை உயர் நீதிமன்றம் பலமுறை ஆணையிட்ட பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்காதது உயர் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.

எனவே, தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் வெள்ளநீர் வடிகால்களைச் சீரமைத்தல், மழைநீர் வடியும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்” என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon