மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

சவுதி: விமானப் பணியில் பெண்கள்!

சவுதி: விமானப் பணியில் பெண்கள்!

சவுதியில் விமானங்களில் பணியாற்ற முதன்முறையாக பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு சீர்திருத்தங்களைஅறிமுகம் செய்து வருகிறார். சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, அங்கு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு போட்டிகளைப் பெண்கள் நேரில் சென்று பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். சமீபத்தில், சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டது. பெண்களுக்கான ஆடை கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது. இளவரசர் சல்மானின் இந்த நடவடிக்கைகள், சவுதி அரேபியப் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரியாத்தைச் சேர்ந்த பட்ஜெட் விமான நிறுவனமான பிளைனாஸ் (Flynas), முதன்முறையாக சவுதி அரேபியப் பெண்களை துணை பைலட்டாகவும், விமானப் பணிப்பெண்களாகவும் பணியமர்த்த முடிவு செய்தது. விமானத் துறையில் பணிபுரிய பெண்களுக்கு அதிகாரப்பூர்வமாக இதுவரை தடைவிதிக்கப்படவில்லை. ஆனாலும், பிலிப்பைன்ஸ் போன்ற கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த பெண்களே அதிக அளவில் விமானங்களில் பணியாற்றி வந்தனர்.

இந்த நிறுவனம் சவுதி அரேபியப் பெண்களை பணியில் சேர்க்க முடிவு செய்து, கடந்த செப்டம்பர் 12ஆம் தேதியன்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பில் 22 வயது முதல் 30 வயது வரை உள்ள பெண்களும் ஆண்களும் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. வரும் இரண்டு ஆண்டுகளில் 300 பணியாளர்களை நியமிக்கவுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்துக்குள் சுமார் 1,000 க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த பணிக்கு விண்ணப்பித்துள்ளனர். இத்தகவலை பிளைனாஸ் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சவுதியில் இருந்து இயக்கப்படும் மற்றொரு பட்ஜெட் விமான நிறுவனமான பிளையடீல் (Flyadeal), சவுதி அரேபியப் பெண்களை பணியமர்த்த முடிவு செய்திருந்தது. இதையடுத்தே, பிளைனாஸ் நிறுவனமும் இந்த முடிவை எடுத்துள்ளது.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon