மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

மிரட்டக் காத்திருக்கும் மலிங்கா

மிரட்டக் காத்திருக்கும் மலிங்கா

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான லசித் மலிங்கா, முழு உடற்தகுதியுடன் இருப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை (செப்டம்பர் 15) தொடங்கவுள்ளது. தொடரில் பங்கேற்கும் 6 அணிகளும் கோப்பையை கைப்பற்றுவதற்கான பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. இந்தத் தொடரை கொண்டு அனைத்து அணிகளும் 2019ஆம் ஆண்டு நடக்கவுள்ள உலகக் கோப்பை தொடருக்கு ஆயத்தமாகத் திட்டமிட்டு வரும் நிலையில் இலங்கை அணி, 35 வயதான லசித் மலிங்காவை மீண்டும் அழைத்துள்ளது. முழுக்க முழுக்க இளம் வேகப்பந்துவீச்சுப் படையைக் கொண்டுள்ள இலங்கை அணி, இம்முறை மலிங்காவின் அனுபவத்தைப் பெரிதும் நம்பியுள்ளது. இதுவரை 204 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து உடற்தகுதி இன்றி ஒதுங்கியே இருந்தார். இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் கூட அவர் பங்கேற்கவில்லை. இலங்கை அணியின் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் விளைவாக தற்போது மீண்டும் சர்வதேச அணிக்குத் திரும்பியுள்ளார்.

மலிங்காவின் ஃபிட்னஸ் குறித்துப் பேசிய இலங்கை அணியின் பயிற்சியாளர் சந்திகா ஹதுருசிங்கா, "இந்தத் தொடருக்காக நாங்கள் வகுத்துள்ள கோட்பாடுகளுக்கு மலிங்கா நிச்சயம் பொருந்துவார். மலிங்கா உலகின் தலைசிறந்த டெத் பவுலர்களில் ஒருவர். கடந்த சில போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறார். இந்தத் தொடரில் எந்த ஒரு அணியையும் குறைத்து மதிப்பிட மாட்டோம். ஆடுகளத்தின் தன்மையை அறிந்து கொண்டு அதற்கேற்ப விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சிப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் இதுவரை 28.92 சராசரி, 5.31 எகானமியைக் கொண்டுள்ள மலிங்கா 301 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார்.

இலங்கை அணியின் முக்கிய வீரர்களாகக் கருதப்படும் தினேஷ் சந்திமல், தனுஷ்கா குணதிலகா ஆகியோர் காயம் காரணமாக இந்தத் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்குப் பதிலாக நிரோஷன் டிக்வெல்லா, சேஹன் ஜெயசூர்யா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நாளை தொடங்கவுள்ள ஆசியக் கோப்பை தொடரின் தொடக்க நாளில் இலங்கை அணி, பி பிரிவில் உள்ள வங்கதேச அணியுடன் மோதவிருக்கிறது.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon