மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

தமிழகத்தில் 1.56 லட்சம் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து!

தமிழகத்தில் 1.56 லட்சம் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து!

தமிழகத்தில் சுமார் 1 லட்சத்து 56 ஆயிரம் ஓட்டுநர் உரிமங்கள், கடந்த 7 மாதங்களில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சாலை விதிகளை முறையாகக் கடைப்பிடிக்காதோரின் ஓட்டுநர் உரிமத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்யும் நடைமுறை கடந்த ஆண்டு இறுதியில் அமல்படுத்தப்பட்டது. வாகனம் ஓட்டிக்கொண்டே செல்போனில் பேசுதல் அல்லது குறுஞ்செய்தி அனுப்புதல், மது போதையில் வாகனம் ஓட்டுதல், அதிக அளவிலான பொருள்களை ஏற்றிச்செல்லுதல் உள்ளிட்ட காரணங்களால், ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் பல்வேறு சாலை விதிகளை மீறிய குற்றங்களுக்காக ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து எடுக்கப்பட்ட 1 லட்சத்து 56 ஆயிரத்து 702 நடவடிக்கைகளில், 40 சதவிகிதம் வழக்கு செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியவர்கள் மீது பாய்ந்துள்ளதகாத் தெரிவிக்கிறது இந்த புள்ளி விவரம். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 19,422 பேரின் ஓட்டுநர் உரிமங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டில், செல்போன் பேசியபடியே 57,158 பேர் வாகனம் ஓட்டியதால், அவர்களின் உரிமம் தற்காலிகமாக ரத்தானது. ஆனால், இதில் அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், 2018ஆம் ஆண்டு தொடக்கத்தில் முதல் 6 மாதங்களில் மட்டும் 64,105 பேர் செல்போன் பேசியபடியே வாகனம் ஓட்டியதால், அவர்களது உரிமம் தற்காலிகமாக ரத்தாகியுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, அளவுக்கு அதிகமாக சரக்கு ஏற்றிச்சென்றதாலும், மது போதையில் வாகனம் ஓட்டியதாலும், வாகனங்களில் அதிக சுமை ஏற்றிச்செல்லுதல் மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டியது உள்ளிட்ட காரணங்களால், பெரும்பாலானோரின் உரிமங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், விபத்துகளில் ஈடுபட்ட வாகன ஓட்டுநர்களின் 2,658 உரிமங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது மற்றும் 1,066 பேரின் உரிமங்கள் ரத்தாகியுள்ளது. இதில், அரசுப் பேருந்து ஓட்டுநர்களும் அடக்கம்.

இது ஒருபுறம் இருக்க, வாகனச் சட்டங்களை மீறுவோரின் உரிமங்களை உடனடியாக ரத்து செய்யவும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் மென்பொருளில் மாற்றங்களைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்துவருகிறது மாநிலப் போக்குவரத்து ஆணையம்.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon