மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 22 ஜன 2020

தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமனம்!

தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமனம்!

உச்ச நீதிமன்றத்தின் 46ஆவது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய்யை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று (செப்டம்பர் 13) நியமித்தார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ரா, வரும் அக்டோபர் 2ஆம் தேதியன்று ஓய்வு பெறவுள்ளார். வழக்கமாக, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஓய்வு பெறுவதற்கு ஒரு மாத காலத்துக்கு முன்பே, அடுத்த தலைமை நீதிபதி யார் என்பதை அறிவிக்க வேண்டும். அதன்படி கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி மத்திய சட்ட அமைச்சகம் தீபக் மிஸ்ராவுக்குக் கடிதம் அனுப்பியது. இதில், அடுத்த தலைமை நீதிபதிக்கான பெயரைப் பரிந்துரைக்குமாறு கேட்கப்பட்டது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய்யின் பெயரைத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் அலுவலகம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. இந்தப் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ரஞ்சன் கோகாய்யை புதிய தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று நியமித்துள்ளார். இவர், அக்டோபர் 3ஆம் தேதி தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொள்ளவுள்ளார்.

நீதிபதி ரஞ்சன் கோகாய் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். 1954ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி பிறந்தார். 1978ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பணியில் சேர்ந்தார். 2001ஆம் ஆண்டு, கவுகாத்தி உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றார். 2011ஆம் ஆண்டு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார். 2012ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணி உயர்வு பெற்றார். தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ள ரஞ்சன் கோகாய் 2019 நவம்பர் 17இல் ஓய்வு பெறுவார்.

இவர், ஆருஷி கொலை வழக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோரின் சட்டவிரோத தொலைப்பேசி இணைப்பக வழக்கு உட்பட பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்துள்ளார்.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon