மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 3 ஜூலை 2020

அப்பாவை எதிர்த்து தேர்தலில் நிற்பேன்!

அப்பாவை எதிர்த்து தேர்தலில் நிற்பேன்!

லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும் தற்போதைய மத்திய உணவுத்துறை அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வானை எதிர்த்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று அவரது மகளே அறிவித்துள்ளார்.

ராம் விலாஸ் பாஸ்வான் தன் முதல் மனைவி ராஜ்குமாரி தேவியை 1981ல் விவகாரத்து செய்துவிட்டு ரீனா என்பவரை இரண்டாவதாக மணம் முடித்தார். முதல் மனைவியின் மகள் ஆஷாதான் இப்போது தனது தந்தைக்கு எதிராக சவால் விட்டிருக்கிறார்.

பிகார் தலைநகர் பாட்னாவில் வசித்து வரும் ஆஷா, அண்மைக் காலம் வரை தனது கணவரோடு லோக் ஜன சக்தியில்தான் இருந்தார். ஆனால் கட்சியில் பாஸ்வான் தனக்கு எந்த முக்கியத்துவம் அளிக்காமல், அவருடைய இரண்டாவது மனைவி ரீனாவின் மகன் சிரக் பாஸ்வானுக்கே முக்கியத்துவம் அளிப்பதால் ஆஷாவும் அவரது கணவரும் லாலு பிரசாத் யாதவ்வின் ராஷ்டிரிய ஜனதா தளத்தில் சேர்ந்தனர்.

அதையடுத்து நேற்று (செப்டம்பர் 13) பாட்னாவில் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ஆஷா.

“ராம் விலாஸ் பாஸ்வான் தனது இரண்டாவது தாரத்தின் மகனான சிரக் பாஸ்வானுக்கே முக்கியத்துவம் அளித்து அவரையே முதன்மைப்படுத்துகிறார். இப்போது சிராக் பாஸ்வான் பிகார் மாநிலம் ஜாமுய் தொகுதி எம்.பி.யாக இருக்கிறார்.

என் தந்தை எப்போதுமே தன் மகள்களை விட மகன்களுக்கே முக்கியத்துவம் அளிக்கிறார். பெண்ணுரிமையை அவர் அளிக்கத் தவறுகிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆர்.ஜே.டி. சார்பில் எனக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டால் என் தந்தையின் ஹாஜிபூர் தொகுதியில் அவருக்கு எதிராகப் போட்டியிட்டு அவரைத் தோற்கடிப்பேன்”என்று கூறியிருக்கிறார்.

ஆஷாவின் கணவர் அனில் சாது பிகார் மாநில லோக் ஜனசக்தி கட்சியின் தலித் சேனாவின் மாநிலத் தலைவராக இருந்தார். அவருக்கும் பாஸ்வானை எதிர்த்து தேர்தலில் நிற்க விருப்பம் இருக்கிறது. “எனக்கோ என் மனைவிக்கோ யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் ராம் விலாஸ் பாஸ்வானை எதிர்த்து நிற்போம்” என்று அறிவித்துள்ளார் அனில்.

ஹாஜிபூர் தொகுதி என்பது 1977 முதல் ராம் விலாஸ் பாஸ்வானுக்கு மிகவும் சாதகமான தொகுதி என்பது குறிப்பிடத் தக்கது.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon