மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

மது அருந்தியவர்கள் வீடு செல்ல ஆம்புலன்ஸ்!

மது அருந்தியவர்கள் வீடு செல்ல ஆம்புலன்ஸ்!

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், மது போதையில் இருப்பவர்கள் பத்திரமாக வீடு சென்றடைவதற்கு, தனது காரை ஆம்புலன்ஸாக மாற்றியுள்ளார்.

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் ஜங்கம்ராயி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால் ரெட்டி. சமூக ஆர்வலரான இவர், மது அருந்துவோர் குடித்துவிட்டு சரியாக வீடு சென்றடைவதற்கும், போலீசாரிடமிருந்து தப்பிப்பதற்கும் புதிய யோசனையொன்றைத் தந்துள்ளார். இதற்காக, தன்னுடைய காரையே ஆம்புலன்ஸாக மாற்றியுள்ளார். மது அருந்திவிட்டு வீடு செல்ல விரும்புவோர், 9848867779 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டு உதவியைப் பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலமாக, அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து வீட்டிற்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்படுவர். இதற்காக எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. இதனால், குடிபோதையில் வாகனம் ஒட்டுதல் என்ற போக்குவரத்து விதிமீறலால் போலீசார் அபராதம் விதிப்பதில் இருந்து தப்பிக்க முடியும் மற்றும் பத்திரமாக வீடு சென்றடைய முடியும்.

முதலாவதாக, இந்த திட்டம் சின்ன சங்கரம்பேட்டை என்ற பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை (செப்டம்பர் 11) அன்று பூஜையுடன் தொடங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார் கோபால் ரெட்டி. “எனக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது. மது அருந்துபவர்களுக்கென ஒரு குழு அமைத்து, அந்த உறுப்பினர்களுடன் நல்ல உறவில் இருந்து வருகிறேன் அதனால், மது அருந்துபவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறேன் என்று அர்த்தமில்லை.

மதுபானம் மற்றும் மது வகைகளுக்கு அனுமதி வழங்குவதன் மூலம், மதுபானம் பயன்படுத்துவதை அரசாங்கம் ஊக்குவிக்கிறது. அதன்மூலம் அரசுக்குப் பெரும் வருவாய் கிடைக்கிறது. ஆச்சரியம் என்னவென்றால், குடிபோதையில் வாகனம் ஓட்டிச் செல்பவர்களுக்குக் கடுமையான தண்டனை மற்றும் அபராதம் விதிக்கிறது அதே அரசு. இது அரசாங்கத்திற்கு இரட்டை வருமானம்” என்று கோபால் ரெட்டி கூறியுள்ளார்.

தற்போது, குடிபோதையில் வாகனம் ஓட்டிச் செல்பவர்களுக்கு ரூ.1000 முதல் ரூ.3,000 வரை அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். “குடிப்பவர்கள் பாதுகாப்பைப் பற்றி உண்மையிலேயே அரசாங்கம் அக்கறை கொண்டிருந்தால், அவர்களிடம் இருந்து எந்த அபராதமும் வசூலிக்காமல், மறுநாள் காலை வரை காவல் நிலையத்தில் தங்க வைக்க வேண்டும். இல்லையெனில், அவர்கள் தங்கள் வீடுகளைப் பாதுகாப்பாக அடைவதற்குப் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கை” என்று கூறியுள்ளார் கோபால் ரெட்டி.

கடைசியாக, மதுக்கடைகளை மூடுதல் அல்லது மது அருந்துபவர்கள் வீடு செல்வதற்கு ஏற்பாடு செய்யும் கட்சிகளுக்கு மட்டுமே மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும், அவர் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் ஆட்சி கலைக்கப்பட்டதாக, தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அறிவித்ததை அம்மாநில ஆளுநர் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனால், அம்மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, அனைத்து கட்சிகளும் தங்களது தொண்டர்களுக்கும் வாக்காளர்களுக்கும் அதிகளவில் மது சப்ளை செய்து வரும் நிலையில், இப்படியொரு திட்டத்தை அறிவித்துள்ளார் இந்த சமூக ஆர்வலர்.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon