மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 22 அக் 2020

டெல்லி பல்கலைக்கழக தேர்தல்: ஏபிவிபி வெற்றி

டெல்லி பல்கலைக்கழக தேர்தல்: ஏபிவிபி வெற்றி

டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட அகில பாரத வித்தியார்த்தி பரிசத் (ஏபிவிபி) வெற்றி பெற்றுள்ளது.

டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது. பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் அமைக்கப்பட்ட 52 வாக்குப் பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 700 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தலில் பயன்படுத்தப்பட்டன. காங்கிரஸ் கட்சியின் ஆதரவு பெற்ற மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கம் (என்எஸ்யுஐ), பாஜகவின் ஆதரவு பெற்ற அகில பாரதீய வித்தியார்த்தி பரிஷத் (ஏபிவிபி), ஆம் ஆத்மி கட்சியின் மாணவர் அமைப்பான சத்ரா யுவா சங்கர்ஷ் சமிதி (சிஒய்எஸ்எஸ்), இடதுசாரி மாணவர் அமைப்பான அகில இந்திய மாணவர் சங்கம் (ஏஐஎஸ்ஏ) உள்ளிட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் தேர்தலில் போட்டியிட்டன.

வாக்கு எண்ணிக்கை நேற்று(செப்டம்பர் 13) நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின்போது மின்னணு இயந்திரங்களில் பலமுறை கோளாறு ஏற்பட்டது. இதனால் இருமுறை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. மாலை 6 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது. இறுதியில், தலைவர், துணைத் தலைவர் இணை செயலாளர் ஆகிய பதவிகளை ஏபிவிபி கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டது. செயலாளர் பதவியை என்எஸ்யுஐ கைப்பற்றியது.

தலைவர்

அன்கிவ் பசோயா (ஏபிவிபி)- 20,467

சன்னி சில்லர் (என்எஸ்யுஐ)- 18,௭௨௩

துணைத் தலைவர்

சக்தி சிங் (ஏபிவிபி ) - 23,046

லீனா (என்எஸ்யுஐ) - 15,௩௭௩

இணை செயலாளர் பதவியை ஏபிவிபியின் ஜோதி சௌத்ரி வென்றுள்ளார். செயலாளர் பதவியை என்எஸ்யுஐ சேர்ந்த ஆகாஷ் சௌத்ரி வென்றுள்ளார். தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஏபிவிபியினருக்கு பாஜக தலைவர் அமித் ஷா வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் என்எஸ்யுஐ வலியுறுத்தியுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த சர்ச்சை தொடர்பாக விளக்கமளித்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகம், “ டெல்லி பல்கலைக்கழகத்துக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தேர்தல் ஆணையம் வழங்கவில்லை. மாநில தேர்தல் ஆணையத்திடம் இதுபோன்ற வாக்குப் பதிவு இயந்திரங்களே இல்லை. இந்த இயந்திரங்களை டெல்லி பல்கலைக்கழகம் தனியாக வாடகைக்கு வாங்கி உள்ளது. இதுதொடர்பாக விளக்கமளிக்க டெல்லி பல்கலைக்கழகத்தில் மூத்த அதிகாரிகள் தற்போது யாரும் இல்லை என்பதால் இந்த விவகாரம் குறித்து பிறகு விரிவான அறிக்கை வெளியிடப்படும்” என்று கூறியுள்ளது.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon