மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 21 செப் 2020

கோவா முதல்வர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கோவா முதல்வர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல் நலம் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் கண்டோலிம் கடற்கரை கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு(62) கடந்த பிப்ரவரி மாதம் கணைய அழற்சி காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனை மற்றும் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுவந்தார். பின்னர் கடந்த மார்ச்சிலிருந்து ஆகஸ்ட் வரை பலமுறை சிகிச்சை பெறுவதற்கு அமெரிக்காவிற்கு சென்றுவந்தார். மருத்துவர்களின் ஆலோசனையின்படி கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி மீண்டும் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றவர் கடந்த வாரம்தான் இந்தியா திரும்பினார்.

இதற்கிடையில் கோவா காங்கிரஸ் கட்சி, மாநிலத்தில் ஆளுநர் ஆட்சியை கொண்டுவர வேண்டி அம்மாநில ஆளுநரை வலியுறுத்தினர். இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராமாகாந்த் கலாப் கடந்த 3ஆம் தேதி தெரிவிக்கையில், “முதல்வரும் மற்ற இரு அமைச்சர்களும் எப்போது வந்து தங்கள் பணியைத் தொடர்வார்கள் என்று தெரியவில்லை. எனவே, தற்போது மாநிலம் அரசியலமைப்பு ரீதியான நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது. மாநில ஆளுநர் இப்பிரச்சினையில் தலையிட்டு முடிவெடுக்க இதுவே சரியான தருணம்” என கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று(செப்டம்பர் 13) மீண்டும் மனோகர் பாரிக்கருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கோவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, மருத்துவர்கள் அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை, கோவா மாநில துணை சபாநாயகரும் பாஜக எம்எல்ஏ-வுமான மைக்கேல் லோபோ மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மனோகர் பாரிக்கர் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon