மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 13 ஆக 2020

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிக்கு இழப்பீடு!

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிக்கு இழப்பீடு!

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் திரவ எரிபொருளைப் பயன்படுத்தி ராக்கெட் அனுப்பும் திட்டத்தை வடிவமைத்தவர். வெளிநாடுகளிடம் பணம் வாங்கிக்கொண்டு இந்திய ராக்கெட் தொழில்நுட்பம் தொடர்பான ரகசியங்களை விற்பனை செய்ததாக, இவர் மீது 1994ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. மாலத்தீவு உளவுப் பிரிவைச் சேர்ந்த மரியம் ரஷீதா, பவுசியா ஹுசேன் ஆகியோர் மூலமாக ரஷ்யா மற்றும் பாகிஸ்தானுக்கு இந்த ரகசியங்களை விற்பனை செய்ததாகக் கூறி, 1994 நவம்பர் 30ஆம் தேதியன்று கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டார் நம்பி நாராயணன். அப்போது, இவர் 50 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

பின்னர், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை என சிபிஐ தனது அறிக்கையை கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதையடுத்து, நம்பி நாராயணன் விடுதலை செய்யப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக, தன் மீது பொய் வழக்கு தொடுத்த காவல் துறை உயரதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் நம்பி நாராயணன்.

இந்த வழக்கு தொடர்பாக நடந்த விசாரணையின்போது, விஞ்ஞானி நம்பி நாராயணன் உளவு வழக்கு சம்பந்தமாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையிலான மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம். இன்று (செப்டம்பர் 14) உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. விஞ்ஞானி நம்பி நாராயணனை கைது செய்தது தேவையில்லாதது என்று கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, கேரள அரசு அவருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்து வழக்கு முற்றுப்பெறுவதாக உத்தரவிட்டது.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon