மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

எழுவர் விடுதலை: ஆளுநருக்கு வலுக்கும் கண்டனங்கள்!

எழுவர் விடுதலை: ஆளுநருக்கு வலுக்கும் கண்டனங்கள்!

எழுவர் விடுதலை குறித்த அமைச்சரவையின் பரிந்துரையை, ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள நிலையில், இதற்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு, ஆளுநருடன் ஆலோசித்து முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, தமிழக அமைச்சரவை கூடி, ஏழு பேரை விடுதலை செய்ய பரிந்துரை செய்து ஆளுநருக்குக் கடிதம் அனுப்பியது. இதுகுறித்து முடிவேதும் எடுக்காத ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சரவையின் பரிந்துரையை மத்திய உள் துறை அமைச்சகத்துக்கு நேற்று அனுப்பியிருக்கிறார். ஏழு பேரும் விடுதலை செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆளுநரின் இப்பரிந்துரை விடுதலை விவகாரத்தில் சுணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சிபிஎம் மாநிலச் செயலாளர், கே.பாலகிருஷ்ணன்

ஆளுநரின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. விடுதலை குறித்த தீர்ப்பு வந்த பிறகு மாநில அமைச்சரவை கூடி ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்தனர். தன் கையில் இருக்கும் பந்தை ஆளுநர், உள் துறை அமைச்சகத்துக்கு ஏன் தள்ளிவிட வேண்டும். அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்றுச் செயல்படுத்துவதுதான் ஆளுநரின் கடமை. மத்திய அரசைக் கேட்டுக்கொண்டுதான் விடுதலை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லவில்லை, ஆளுநரே முடிவெடுக்கலாம் என்றுதான் கூறியுள்ளது.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு மீறி, உள் துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைப்பது நீதிமன்றத்தை அவமதிக்கக்கூடிய செயலாகும். இதற்கு எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஏழு பேரையும் விடுதலை செய்யக் கூடாது என்பதற்காக உள்நோக்கத்தோடு கூடிய நாடகம்தான் இது. இது தமிழகத்தில் ஓர் எதிர்விளைவைத்தான் உண்டாக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.

சிபிஐ மாநிலச் செயலாளர், முத்தரசன்

ஏழு பேரையும் விடுதலை செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றதே மத்திய அரசுதான். அந்த வழக்கில் விடுதலை குறித்து மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன்பிறகு தமிழக அமைச்சரவைக் கூடி தீர்மானம் இயற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆளுநர் அதை ஏற்றுக்கொண்டு ஏழு பேரின் விடுதலைக்கு வழிவகுப்பார் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தோம். இந்த நிலையில் தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை மத்திய உள் துறைக்கு ஆளுநர் அனுப்பியிருப்பது உள்நோக்கமுடையது. ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுத்து அனுப்பியிருக்கிறார் என்று நான் கருதவில்லை. மத்திய அரசுடன் ஆலோசித்த பிறகே அனுப்பியுள்ளார். இது உள்நோக்கமுடையது. மனிதாபிமானமற்ற செயலுமாகும்.

அதிமுக செய்தித் தொடர்பாளர், வைகைச்செல்வன்

தமிழக அரசு தன்னுடைய கடமையைச் செய்துவிட்டது. ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநரே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்தாலும், ஆளுநர் உள் துறை அமைச்சகத்துக்கு தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை அனுப்பி ஒப்புதலைப் பெற இருக்கிறார் என்ற தகவல் வந்துள்ளது. உடனடியாக ஒப்புதலைப் பெற்று, ஏழு பேரின் விடுதலைக்கு அச்சாரம் போட வேண்டும் என்பதுதான் அதிமுகவின் கருத்து.

விசிக தலைவர், திருமாவளவன்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்துள்ள நிலையில், அது குறித்து மத்திய உள் துறை அமைச்சகத்தின் கருத்தை ஆளுநர் கேட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இது காலம் தாழ்த்தும் நடவடிக்கை மட்டுமல்ல; மாநில உரிமைகளுக்கு முரணானதுமாகும். மேதகு ஆளுநர் தனது முடிவை மறுபரிசீலனை செய்து ஏழு பேரின் விடுதலைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

தவாக தலைவர், வேல்முருகன்

எழுவர் விடுதலை குறித்த பரிந்துரையை வேண்டுமென்றே, திட்டமிட்டு ஆளுநர் ஒன்றிய அரசுக்கு அனுப்பியிருப்பது அரசமைப்புச் சட்டத்துக்கே புறம்பானதும், ஒட்டுமொத்த தமிழ் மக்களையே அவமதிப்பதுமான செயலாகும். இதை வன்மையாகக் கண்டிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஒன்றிய அரசுக்கு அனுப்பியதைத் திரும்பப்பெற்று, எழுவரின் விடுதலைக்கான பரிந்துரைக்கு ஒப்புதலை வழங்கி, சட்டப்படி நடந்துகொள்ளுமாறு ஆளுநரை வலியுறுத்துகிறது.

ஆளுநர் சட்டப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி, வரும் 26ஆம் தேதியன்று மாலை 4 மணி அளவில் ஆளுநர் மாளிகை முன் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon