மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

திமுகவினருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!

திமுகவினருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!

பெரம்பலூரில் திமுக முன்னாள் நிர்வாகி, பெண் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ வெளியானதை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் பிரியாணி கடை ஒன்றின் ஊழியர்களை யுவராஜ், திவாகர் ஆகிய இரு திமுக நிர்வாகிகள் கடந்த மாதம் கடுமையாகத் தாக்கினர். இதுதொடர்பான வீடியோ காட்சி வெளியானதை அடுத்து இருவரும் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர்.

இந்த நிலையில், பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் அழகு நிலையம் நடத்தி வரும் சத்யா (35) என்பவரை, பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் செல்வகுமார் (52) கடுமையாகத் தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நடந்த இந்தச் சம்பவம் குறித்து பெரம்பலூர் டவுன் போலீஸில் சத்யா புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இந்த சிசிடிவி வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது..

இதையடுத்து செல்வகுமாரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். திமுக கட்சியில் இருந்து அவரை இடைநீக்கம் செய்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் முகநூலில் கட்சியினருக்கு நேற்று (செப்டம்பர் 13) எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்தப் பதிவில், “கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்திலும், கழகக் கட்டுப்பாட்டினை மீறியும் பெண்மணி ஒருவர்மீது தாக்குதல் நடத்திய பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். தனிப்பட்ட பிரச்சினைகள், விருப்பு வெறுப்புகள் இவற்றின் காரணமாக கட்சி உறுப்பினர்கள் அடாவடியாகச் செயல்படும் போக்கைக் கட்சி தலைமை அனுமதிக்காது. ரவுடித்தனமாகச் செயல்படுவது, பெண்களிடம் வரம்பு மீறி நடப்பது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொள்வது போல செயல்படும் கட்சியினர் யாராக இருந்தாலும் கட்சி விதிகளின்படி தண்டிக்கப்படுவார்கள். தனி நபரைவிட கழகமே உயர்ந்தது என்ற உணர்வின்றி செயல்படுபவர்கள் கடும் நடவடிக்கைக்குள்ளாவார்கள்” என்று கூறியுள்ளார்.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon