மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 22 அக் 2020

காய்கறிகள் விலை எகிறுகிறதா?

காய்கறிகள் விலை எகிறுகிறதா?

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இந்தியாவில் காய்கறிகள் விலை அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

நிலையில்லாமல் அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலையால் போக்குவரத்து செலவுகள் உயர்ந்து காய்கறிகள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதாகக் காய்கறிகள் வர்த்தகர்கள் கூறுகின்றனர். செப்டம்பர் 11ஆம் தேதி கணக்குப்படி தேசியத் தலைநகர் டெல்லியில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 80.87 ரூபாயாகவும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 72.97 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. சென்னையில் லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் 84.05 ரூபாயாகவும், டீசல் 77.13 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

பெங்களூருவில் லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் ரூ.83.51ஆகவும், டீசல் ரூ.75.32ஆகவும், கொல்கத்தாவில் லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் ரூ.83.75 ஆகவும், டீசல் 75.82 ஆகவும், ஹைதராபாத்தில் லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் 85.75 ஆகவும், டீசல் ரூ.79.37 ஆகவும் அதிகரித்துள்ளது. கட்டுங்கடங்காத எரிபொருள் விலையுயர்வால் நாடு முழுவதும் காய்கறிகளை எடுத்துச் செல்வதற்கான செலவு அதிகரித்துள்ளது. இதனால் காய்கறிகள் விலையுயரக் கூடும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சிவராஜ் ஷர்மா என்ற வர்த்தகர் மில்லேனியம் போஸ்ட் ஊடகத்திடம் பேசுகையில், “எரிபொருள் விலை உயர்வு நீடித்தால் காய்கறிகள் விலை உயரக்கூடும். கையிருப்பில் உள்ள காய்கறிகள் இன்னும் சில நாட்களில் விற்பனையாகிவிடும். அதன்பிறகு தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, இஞ்சி உள்ளிட்ட காய்கறிகள் விலை உயரும். குறிப்பாக தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.50-60ஐ எட்டும். வெங்காயம் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.50 வரை உயரக்கூடும். தற்போது தக்காளி, வெங்காயம் ஆகியவை கிலோ ரூ.20 ஆக மட்டுமே உள்ளன. விலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் வரியை உடனடியாகக் குறைக்க வேண்டும். அப்போதுதான் மொத்த விலைச் சந்தைகளில் காய்கறிகள் விலை கட்டுக்குள் இருக்கும். இல்லையென்றால் பொதுமக்கள் கடுமையானப் பாதிப்புக்கு உள்ளாவார்கள்” என்றார்.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon