மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

துணை முதல்வரை விசாரிக்க ஆணையம் திட்டம்?

துணை முதல்வரை விசாரிக்க ஆணையம் திட்டம்?

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து துணை முதல்வர் பன்னீர்செல்வம், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால், 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். லண்டனிலிருந்து வரவழைக்கப்பட்ட மருத்துவர் ரிச்சர்ட் பீலே, சிங்கப்பூர் மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர். எய்ம்ஸ் மருத்துவக் குழுவினரும் சிகிச்சை அளித்திருந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா காலமானார்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக சர்ச்சை எழுந்த நிலையில், இதை விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ரிச்சர்ட் பீலே மற்றும் சிங்கப்பூர் மருத்துவர்களிடம் வீடியோ கான்பரன்ஸிங் மூலம் விசாரணை நடத்த விசாரணை ஆணையம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான வசதி ஆணையத்தில் இல்லாததால் தலைமைச் செயலகம் நாமக்கல் மாளிகையில் விசாரணை செய்யத் திட்டமிடப்பட்டதாகவும், ஆனால் அரசியல் ரீதியான விமர்சனம் எழுப்பப்படலாம் என்று கருதி, தேசிய பசுமைத் தீர்ப்பாயக் கட்டடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

துணை முதல்வரிடம் விசாரணை?

செப்டம்பர் மாதத்தோடு மருத்துவர்களிடம் விசாரணையும் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணையும் முடிக்க விசாரணை ஆணையம் திட்டமிட்டுள்ளதாம். அக்டோபர் முதல் வாரத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் விசாரணையும் அன்றைய தினமே குறுக்கு விசாரணையும் நடத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அக்டோபர் 18ஆம் தேதிக்குள் அனைத்து விசாரணைகளையும் முடித்து, கொடுக்கப்பட்ட கால அவகாசமான அக்டோபர் 24ஆம் தேதிக்குள் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் திட்டத்துடன் ஆணையம் முனைப்பு காட்டுவதாவும் ஆணைய வட்டாரங்களில் பேசப்பட்டுவருகிறது.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon