மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

மல்லையாவைக் காப்பாற்றியது காங்கிரஸ்தான்: நிர்மலா

மல்லையாவைக் காப்பாற்றியது காங்கிரஸ்தான்: நிர்மலா

விஜய் மல்லையாவைக் காப்பாற்றியது காங்கிரஸ்தான் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

நாடு முழுவதும் இரண்டு நாட்களாக திருடன் - போலீஸ் கதைதான் மீடியாக்களில் தேசிய விவாதம் ஆகி வருகிறது. ரூபாய் ஒன்பதாயிரம் கோடியை நாட்டுடைமை ஆக்கிய வங்கிகளில் இருந்து ஆட்டையைப் போட்ட விஜய் மல்லையா, லண்டன் நீதிமன்ற வளாகத்தில், ‘நான் நம்ம நிதி அமைச்சர் அருண் ஜேட்லிகிட்ட சொல்லிட்டுதான் பாஸ் வந்தேன்’ என்று பற்ற வைக்க, அது இந்தியா முழுவதும் பற்றிக்கொண்டு எரிகிறது.

உடனே ஜேட்லி பதவி விலக வேண்டும், பிரதமர் மோடி இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ட்விட் போட்ட ராகுல் பிரச்சினையின் தீவிரம் கருதி நேற்று பிரஸ் மீட்டும் நடத்தினார்

ஆரம்பத்திலேயே நிதி அமைச்சர் ஜேட்லி இதுகுறித்து விளக்கம் கொடுத்துவிட்டாலும் காங்கிரஸ் எம்.பி. புனியா, “விஜய் மல்லையாவும் அருண் ஜேட்லியும் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உட்கார்ந்து 15 நிமிடத்துக்கும் மேல் பேசினார்கள். இதை என் கண்ணால் பார்த்தேன். வேணும்னா நாடாளுமன்ற சிசிடிவி கேமராவை செக் பண்ணலாமே” என்று ராகுல் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு பேசிய பிறகுதான் விஷயம் வில்லங்கம் ஆவதை உணர்ந்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை களத்தில் இறக்கியிருக்கிறது பாஜக.

இந்தச் சர்ச்சை குறித்து நேற்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய நிர்மலா சீதாராமன், “காங்கிரஸ் இந்தப் பிரச்சினையை உள் நோக்கத்தோடு அணுகுகிறது. ஜேட்லியைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸின் உள் நோக்கமாக இருக்கிறது. நாடாளுமன்ற வளாகத்தில் விஜய் மல்லையாவுக்கும் ஜேட்லிக்கும் இடையில் நடந்ததாகச் சொல்லப்படுவது சந்திப்பு என்ற வார்த்தைக்கே தகுதியானது அல்ல. இது ஊதிப் பெரிதாக்கப்படுகிறது. மல்லையா தனது எம்.பி. என்ற நிலையை தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார் என்று ஜேட்லி ஏற்கெனவே சொல்லிவிட்டார்” என்று குறிப்பிட்ட நிர்மலா,

தன்னை ஐ விட்னஸ் என்று சொல்லும் புனியாவின் கருத்து பற்றி சொல்கையில், “ஜேட்லியும் மல்லையாவும் நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்ததாக புனியா சொல்கிறார். அதற்கான சிசிடிவி காட்சிகளை சோதிக்கச் சொல்கிறார். அந்தக் காட்சிகளில் ஆடியோவும் இருக்குமல்லவா?’’ என்று கேட்டிருக்கிறார்.

மேலும், “காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் விஜய் மல்லையாவைக் காப்பாற்றும் நோக்கத்தில் ரிசர்வ் வங்கிக்கும், பாரத ஸ்டேட் வங்கிக்கும் கடிதங்கள் எழுதப்பட்டன. விஜய் மல்லையா இழைத்த குற்றங்கள் யாருடைய காலத்தில் இழைக்கப்பட்டன? மல்லையாவைக் காப்பாற்றியது காங்கிரஸ்தானே தவிர நாங்கள் அல்ல” என்று கூறியிருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon