செல்போன் பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், நீதிபதி வித்தியாசமான தீர்ப்பை வழங்கியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் ராஜேந்திர திவான். இவர், அம்மாநில உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், “செல்போன் பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சில வழிமுறைகளைக் கொண்டுவர வேண்டும். ஆபத்துகளிலிருந்து கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளைக் காக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஹேமந்த் குப்தா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், முதலில் மனுதாரரின் செல்போனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கச் சொல்லுங்கள் என்று கூறினார் நீதிபதி. செல்போன் பயன்படுத்தும் ஒருவரே, அதன் பயன்பாட்டுக்கு எதிராகத் தொடர்ந்துள்ள இந்த வழக்கை விசாரிப்பதா, இல்லையா என்பதைப் பிறகு முடிவு செய்துகொள்வோம் என்று நீதிபதி தெரிவித்தார்.
இதுகுறித்து முடிவெடுக்க கால அவகாசம் வேண்டுமென்று கேட்டுக் கொண்டார் மனுதாரரின் வழக்கறிஞர். இதையடுத்து, செல்போனை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பது குறித்து முடிவெடுக்க திவானுக்கு இரண்டு வாரங்கள் அவகாசம் அளித்து உத்தரவிட்டார் நீதிபதி ஹேமந்த் குப்தா.