மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 21 அக் 2020

புதிய களத்தில் பதஞ்சலி!

புதிய களத்தில் பதஞ்சலி!

பால் பொருட்கள் விற்பனையில் களமிறங்கவுள்ளதாக பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது.

வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் விற்பனைப் பிரிவில் ஈடுபட்டுவரும் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தனது வர்த்தக எல்லையை விரிவுபடுத்தும் விதமாகப் பால் பொருட்கள் விற்பனையில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதையடுத்து பால், தயிர் மற்றும் வெண்ணெய் போன்ற பால் பொருட்களை இனி பதஞ்சலி நிறுவனம் சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்தவுள்ளது. இப்பிரிவில் ரூ.1,000 கோடி விற்பனை இலக்கை எட்டவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

செப்டம்பர் 13ஆம் தேதி டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பாபா ராம்தேவ் பேசுகையில், “அடுத்த நிதியாண்டுக்குள் பால் பொருட்கள் பிரிவில் ரூ.1,000 கோடி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த நிதியாண்டில் ரூ.500 கோடி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். நாள் ஒன்றுக்கு 10 லட்சம் லிட்டர் பால் பொருட்கள் விற்பனை செய்வதே எங்கள் இலக்கு. மற்ற நிறுவனங்களின் விலையைக் காட்டிலும் 2 ரூபாய் விலை குறைவாகவே நாங்கள் விற்பனை செய்வோம்” என்றார்.

ஹரித்துவாரை தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனத்துக்கு இந்தியா முழுவதும் 56,000 சில்லறை வர்த்தகர்கள் உள்ளனர். இந்த நிறுவனங்களின் வழியாகவே பால் பொருட்களையும் விற்பனை செய்ய பதஞ்சலி திட்டமிட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து நேரடியாகப் பால் கொள்முதல் செய்யவும் பதஞ்சலி நிறுவனம் அமைப்பு முறையை ஏற்படுத்தி வருகிறது. இந்திய மாட்டினங்களிடமிருந்து கறக்கப்படும் பாலை மட்டுமே வாங்கவிருப்பதாகவும் அந்நிறுவனத்தின் தரப்பிலிருந்து வெளியாகும் செய்திகள் கூறுகின்றன.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon