மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

டெல்லியில் போராட்டம் நடத்த நிபந்தனைகள்!

டெல்லியில் போராட்டம் நடத்த நிபந்தனைகள்!

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில், டெல்லி ஜந்தர் மந்தரில் 1,000 பேருக்கு மேல் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்பது உட்படப் பல வழிமுறைகளை வகுத்துள்ளது டெல்லி காவல் துறை.

கடந்த ஜூலை 23ஆம் தேதியன்று வெளியிட்ட தீர்ப்பொன்றில், டெல்லியிலுள்ள ஜந்தர் மந்தர், போட் கிளப், நாடாளுமன்றச் சாலை உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் பேரணி நடத்துவது, போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதற்கு முழுக்கத் தடை விதித்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். அதிகளவில் மக்கள் கலந்துகொள்ளும் போராட்டங்களின்போது உரிய தலைவர்கள் மற்றும் நோக்கங்கள் இல்லாமல், சில நேரங்களில் அரசு மற்றும் தனியார் சொத்துகள் சேதப்படுத்துவதாகக் கூறப்பட்ட காரணத்தின் அடிப்படையில் இந்த முடிவு வெளியிடப்பட்டது.

இதனை அடிப்படையாகக் கொண்டு, நேற்று (செப்டம்பர் 13) டெல்லி காவல் துறை சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, டெல்லி ஜந்தர் மந்தரில் 1,000 பேருக்கு மேல் போராட்டத்தில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது. அதேபோல, நாடாளுமன்றச் சாலையில் 2,000 பேரும், போட் கிளப் பகுதியில் 100 பேரும் மட்டும் போராட்டத்தில் ஈடுபடலாம். கம்புகள், தீப்பிடிக்கும் பொருட்கள், வாள் மற்றும் இதர ஆயுதங்களைப் போராட்டம் நடத்தும் இடத்துக்கு எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடும்பாவி எரிப்பது, சமையல் செய்வது, குப்பை கொட்டுவது போன்றவையும் அனுமதிக்கப்பட மாட்டாது என்று டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளது.

ஜந்தர் மந்தரில் ஒரு நாளைக்கு இரண்டு போராட்டங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அதேபோல, டெல்லி நாடாளுமன்றச் சாலையில் போராட்டம் செய்பவர்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை சம்பந்தப்பட்ட அலுவலகத்திடம் ஒப்புதல் பெற்று ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தலாம். 50,000 பேருக்கும் அதிகமான அளவில் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக இருந்தால், டெல்லி ராம்லீலா மைதானத்தைப் பயன்படுத்தலாம் என்றும் இந்த வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்களை இந்த மாதத்துக்குள் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென்று, நேற்று முன்தினம் (செப்டம்பர் 12) டெல்லியில் நடந்த காவல் துறை அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த முடிவுகளில் சிலவற்றை மறுபரிசீலனை செய்வது குறித்து அதிகாரிகள் யோசித்து வருவதாகவும், டெல்லி காவல் துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon