மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 21 பிப் 2020

சட்டப்பேரவை தேர்தல்: ஸ்மார்ட்போனை நம்பும் பாஜக!

சட்டப்பேரவை தேர்தல்: ஸ்மார்ட்போனை நம்பும் பாஜக!

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளன. இந்த மூன்று மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் உள்ளது. மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் அக்கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் மற்றும் ஏழை இளைஞர்களுக்கு ஸ்மார்ட்போன்களை வழங்குவதற்கான திட்டங்களை பாஜக அரசு தொடங்கியுள்ளது. ராஜஸ்தானில் பாமாஷா டிஜிட்டல் பரிவர் யோஜனாவைக் கடந்த மாதம் அறிமுகப்படுத்திப் பேசிய அம்மாநில முதல்வர் வசுந்திர ராஜே, “ஏழை எளியவர்கள் தங்கள் செல்போனில் ஒரு சின்ன பொத்தானை அழுத்துவதன் மூலம் அரசின் நலத்திட்டங்களை அறிந்துகொள்ள உறுதிபூண்டுள்ளோம். இந்தத் திட்டம் மூலம் ஒரு கோடி குடும்ப அட்டைதாரர்கள் பலனடைவார்கள்” என்று கூறியிருந்தார்.

இதேபோல், சத்தீஸ்கர் அரசும் சஞ்சார் கிராந்தி யோஜனா மூலம் ஸ்மார்ட்போன்களை வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டம் மூலம் 45 லட்சம் மக்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்க அம்மாநில முதல்வர் ராமன் சிங் திட்டமிட்டுள்ளார்.

எனினும், ஸ்மார்ட்போன்களின் விநியோகம் என்பது தனது வலுவான சமூக ஊடக இருப்பை வெளிப்படுத்த பாஜக மேற்கொள்ளும் ஒரு யுத்தியாகவே கருதப்படுகிறது. சமூக வலைதளத்தின் பயனாக கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக வெற்றியடைந்தது. ஸ்மார்ட்போன்களை விநியோகிப்பதன் மூலம் அத்தகைய வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது.

சத்தீஸ்கரில் ஜியோ இணைப்புடன் கூடிய 45 லட்சம் மைக்ரோமேக்ஸ் போன்களை அரசு வழங்கி வருகிறது. இதுதொடர்பாக அம்மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அரசு அதிகாரி ஒருவர் தி பிரின்ட் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “டெண்டர்கள் மூலம் ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன. மைக்ரோமேக்ஸ் போனின் சந்தை விலை ரூ. 5 ஆயிரம் ஆகும். ஆனால், நாங்கள் இலவசமாக வழங்குகிறோம். தொலைத்தொடர்பு சேவை முதலில் மோசமாக இருந்தாலும் தற்போது முன்னேற்றமடைந்துள்ளது” என்று கூறியுள்ளார். ராஜஸ்தான் அரசு ரூ.1000 மதிப்புடைய செல்போன் மற்றும் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகிறது.

இது தொடர்பாக தி பிரின்ட் வெளியிட்டுள்ள செய்தியில், “போனுக்கு 500 ரூபாயும் தொலைப்பேசி இணைப்புக்கு 500 ரூபாயும் அரசின் சிறப்பு முகாம்களில் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. போன் மற்றும் தொலைப்பேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் குறித்து இனிதான் முடிவு செய்யப்படவுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு மாநிலங்களில் வழங்கப்படும் போன்களிலும் நமோ ஆப் இயல்பாகவே உள்ள நிலையில், ராஜஸ்தானில் வழங்கப்படவுள்ள போன்களில் அம்மாநில முதல்வர் வசுந்திர ராஜே பெயரிலான ஆப் இணைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன் டெல்லியில் நடந்த பாஜக தேசிய இளைஞர் அணி கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி பேசிய வார்த்தைகள், ‘நெக்ஸ்ட் எலெக்‌ஷன் வில் பி ஃபாட் த்ரோ ஒன்லி போன்’ என்பதுதான்.

அதாவது அடுத்து வரும் தேர்தல் எல்லாம், செல்போனுக்குள் இருப்பவர்களுக்குள் செல்போனுக்குள் இருப்பவர்கள் மூலமாகவே நடைபெறும் என்று பேசினார் பிரதமர் மோடி. இன்றைய உலகம் என்பது ஸ்மார்ட்போனுக்குள் இருக்கிறது. எனவே அனைவரையும் ஸ்மார்ட்போனுக்குள் கொண்டு வாருங்கள் என்று அழைப்பு விடுத்திருந்தார் பிரதமர் மோடி.

மத்தியப் பிரதேசத்தை பொறுத்தவரை அரசின் திட்டங்கள் தேர்தலுக்கு உதவும் என பாஜக எண்ணுகிறது. இதைத் தவிர சமூக வலைதளத்தில் காங்கிரஸைச் சமாளிப்பதற்கு பாஜக தரப்பில் 65 ஆயிரம் இணைய வீரர்கள் தயாராக உள்ளனர். இதுதொடர்பாக அக்கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் சிவராஜ் சிங் தாபி, “கடந்த மூன்று மாதங்களில் 65,000 பேரை இணையதளப் பிரச்சாரத்துக்காக நியமித்துள்ளோம். அவர்களுக்கு ‘சைபர் வாரியா்ஸ்’ என்று பெயர் சூட்டியுள்ளோம். தேர்தல் நெருங்கும் நேரத்தில் மேலும் 5,000 பேர் கூடுதலாக சமூக வலைதளப் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள்” என்று சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon