மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 25 பிப் 2020

தமிழுக்கு வரும் புதிய ‘சூப்பர் ஸ்டார்’!

தமிழுக்கு வரும் புதிய ‘சூப்பர் ஸ்டார்’!

நடிகர் சாருஹாசன் நடித்துள்ள ‘தாதா 87’ படத்தின் ட்ரெயிலரில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பட்டம் ரசிகர்களிடம் கவனம் பெற்றுவருகிறது.

கேரக்டர் ரோல்களில் நடித்துவந்த நடிகர் சாருஹாசன் நீண்ட நாட்களுக்குப் பின்னர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துவரும் படம் தாதா 87. விஜய்ஸ்ரீ ஜி இயக்கும் இந்தப் படத்தில் சாருஹாஸனுடன் இணைந்து ஜனகராஜ், ஜெனி பல்லவி, அனு லாவண்யா, மனோஜ் குமார், ஆனந்த் பாண்டி, 'ஆதித்யா டிவி' புகழ் கதிர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லியாண்டர் மற்றும் அல் ரூஃபியான் இசையமைத்துள்ள இதை கலை சினிமாஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது.

கேங்க்ஸ்டர் வகை படம் எனக் கூறப்படும் இதில், சாருஹாசனுக்கு ஜோடியாக  நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா நடித்துள்ளார். ஏற்கெனவே இதன் டீசர் வெளியாகி கவனம் பெற்றிருந்த நிலையில் இந்தப் படத்தின் ட்ரெயிலர் நேற்று (செப்டம்பர் 13) வெளியாகியுள்ளது.

ட்ரெயிலரின் துவக்கத்தில் “அவன் கிழவன் இல்லைடா, எமன் டா...” என சாருஹாசனுக்கு படு பில்டு-அப் கொடுப்பது போல காட்டுகிறார்கள். ஆனால், அதன் அடுத்த ஷாட்டிலோ “நான் எமன் இல்லைடா, சத்யாடா...” என சுய வாக்குமூலம் கொடுப்பதுபோல பஞ்ச் பேசுகிறார் சாருஹாசன். ஏன் இப்படி அடுத்தடுத்து முன்னுக்குப்பின் முரணாக ட்ரெயிலரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன எனும் விஷயம் படம் பார்த்தால்தான் தெரியவரும்.

இதைத் தாண்டி அந்த ட்ரெயிலரைக் கவனித்தால் இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது. அதாவது இந்தப் படத்தின் ஹீரோவான சாருஹாசனுக்கு 'ஏஜிங் சூப்பர் ஸ்டார்' என்னும் பட்டம் சூட்டியிருக்கிறார்கள். ஏற்கெனவே பல சூப்பர் ஸ்டார்கள் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்திருக்கிற நிலையில் தற்போது இந்த ஏஜிங் சூப்பர் ஸ்டாரும் களத்தில் மல்லுக்கட்ட வந்துள்ளார்.

கேங்ஸ்டர் வகைப்படத்துக்கான அனைத்து அம்சங்களுடனும் வலம்வரும் இந்த ட்ரெயிலர், படத்தில் பிளாக் ஹியூமர் மற்றும் அடல்ட்ஸ் கிளாமருக்கும்கூட முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon