மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

இசை விமர்சனம்: 2018இல் செல்லுபடியாகுமா 96?

இசை விமர்சனம்: 2018இல் செல்லுபடியாகுமா 96?

உதய் பாடகலிங்கம்

காதல் சுகமானது; அற்புதமானது; தெய்வீகமானது என்று எத்தனையோ விளக்கங்கள் அளிக்கலாம். அது குறித்துப் பக்கம் பக்கமாக எழுதலாம். மூச்சுவிடாமல் பல மணிநேரம் பேசலாம். எதுவும் செய்ய விருப்பமில்லையென்றால், மவுனமாக மனதுக்குள்ளேயே காதல் வளர்க்கலாம்; ரசிக்கலாம்; வாழ்வுப் பயணத்துக்கான வழித்துணையாகக் காதலை அருகில் வைத்துக்கொள்ளலாம். காதலைப் பற்றிச் சொல்வதற்கு ஒவ்வொருவரிடமும் எத்தனையோ விஷயங்கள் உள்ளன. காதலைப் பற்றிச் சொல்லப்படும் எந்த விஷயமும் இங்கு புதிதல்ல.

ஏனென்றால், இந்தப் பூமி பிறந்த அன்றே காதலும் பிறந்துவிட்டது. ஆதி மனிதன் கடித்ததாகச் சொல்லப்படும் ஆப்பிளில் ஒட்டிய எச்சிலில் இருந்து, காதலைப் போற்றுவதும் தொடங்கிவிட்டது. இருந்தாலும், நாம் காதலைக் கொண்டாடுகிறோம், அதைவிட இந்தப் பூமியை வளர்ப்பதற்கான வேறு வழி இல்லையென்பதால். அதனைப் பின்பற்றியே, 96 படத்தின் பாடல்களைக் கேட்கையில் சிலிர்ப்பு ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும் முதன்முறை போலவே…

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கத்தில் வெளியாகவுள்ள 96 படத்துக்கு இசையமைத்தவர் கோவிந்த் வசந்தா. இதற்கு முன்னர் இயக்குநர் சசிகுமார் நடித்த அசுரவதம் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். சீதக்காதி, ஒருபக்கக் கதை ஆகிய திரைப்படங்கள் இவரது இசையமைப்பில் வெளியாகக் காத்திருக்கின்றன. இதற்கு முன்னால் நார்த் 24 காதம், மூத்தோன் என்று அரை டஜன் மலையாளப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதற்கு மேல் கோவிந்த் புராணம் தேவைப்படாது. அதனை மறக்கடிக்கும் அளவுக்கு, இவர் 96 படத்தில் பேரனுபவத்தைப் பரிசளித்துள்ளார்.

பாடல்களில் பொங்கும் காதல்

இந்தப் படத்தின் அத்தனை பாடல்களும் காதலைக் கொண்டாடுகின்றன. படமும் அத்தகையது என்று திரைக் குழுவினர் சொல்லி வருகிறார்கள். வெறுமனே காதல் கொண்டாட்டமாக இல்லாமல், நம் மனதுடன் உறவாடக்கூடியதாகவும் இருக்கின்றன இந்தப் பாடல்கள். இவை நம் மனதில் உருவாகும் எழுச்சியில் ஒரு பங்கைக் கடத்தினால்கூட, இந்தப் படம் பெருவெற்றியடைந்த காதல் படங்களின் வரிசையில் சேருமென்பதில் சந்தேகமில்லை.

இந்தப் படத்தில் வரும் அந்தாதி பாடலையே முதலில் கேட்டேன். அதற்கு முன்பாகவே, இந்தப் படத்தின் டீசரில் ‘காதலே காதலே’ பாடலின் ஒரு சிறு துண்டு இடம்பெற்றிருந்தது.

பேரன்பே காதல்

உள்நோக்கி ஆடுகின்ற ஆடல்…

சதா ஆறாத ஆவல்…

ஏதேதோ சாயல் ஏற்றித் திரியும் காதல்..

பிரத்யேகத் தேடல்

என்ற வரிகள், காதலில் உருகும் இரண்டு மனங்களின் மவுன உரையாடலை மொழிபெயர்க்கின்றன. எளிய, அழகான தமிழ் வார்த்தைகளுக்கு நடுவே நிரம்பியிருக்கும் துள்ளல் இசை, கடற்கரை மணலில் காலாற நடந்துவிட்டுக் குடை ராட்டினத்தில் ஏறித் தலை கிறுகிறுக்கச் சுற்றுவதைப் போலிருக்கிறது.

அதன் பின்னர் வரும் பாடல் வரிகள், அடுத்த தலைமுறையின் கனவு வார்த்தைகளால் கவனமாகக் கோக்கப்பட்டிருக்கிறது.

காதல் தெய்விக எதிரி

காதல் சாத்தானின் விசிறி

காதல் ஆன்மாவின் புலரி

வாழ்ந்து பெற்ற டிகிரி

என்று நீளும் இந்தப் பாடலின் இடைப்பகுதி வேறு காலகட்டத்தை நம் மனக்கண்ணில் விரிக்கிறது. இரு வேறு கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை, இயல்புகளை விவரிக்கிறது.

இந்தப் பாடலின் முடிவில் பிரேம்குமார் எழுதியுள்ள ‘தொட வேண்டாம்’ என்ற காதல் கவிதையைப் பாடுகிறார் அல்லது வாசிக்கிறார் நடிகர் நாசர். அவரது பெருமூச்சும்கூட இந்தப் பாடலின் இடையே வருகிறது, ஆழமான காதல் இதயத்தில் எழுப்பும் ஒலிகளைப் போல...

அனுபவங்களை மீட்டெடுக்கும் இசை

‘வசந்த காலங்கள் கசந்து போகுதே.. எனது தூரங்கள் ஓயாதோ..’ பாடலைக் கேட்கையில், இளையராஜாவின் இசையில் வெளியான ‘ஈரவிழிக் காவியங்கள்’ படப் பாடல்கள் நினைவில் எழுகின்றன. இந்த ஒப்பீடு அநாவசியமானதுதான். ஆனால், ஒரு நல்ல படைப்பு எப்போதும் வெவ்வேறு தளத்தில் பல நல்ல படைப்புகளைக் கண்ட அனுபவங்களை மீட்டெடுக்கும். நினைவின் இடுக்குகளில் இருந்து மேலேறி, நம் மனக்கண்ணில் நிழலாடும்.

இந்தப் பாடலில் கவித்துவமான சில வார்த்தைகள், பாடலின் லயத்திற்கு ஏற்ப சுருங்கி ஒலிக்க வேண்டிய கட்டாயத்துக்குட்படுவதால், அதன் ஒலிப்புத்தன்மையை இழந்துவிடுவதைச் சரி செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. துள்ளல் இசையில் நெடில் குறிலாவதும், குறில் நெடிலாவதும் பெரிய பிரச்சினையில்லை. மிக மென்மையாக நகரும் மெலடியில், எல்லாமே சரியாக இருக்க வேண்டியது அவசியம்.

தி லைஃப் ஆப் ராம் என்ற பாடல், ‘கரை வந்த பிறகே பிடிக்குது கடலை.. நரை வந்த பிறகே புரியுது உலகை..’ என்று தொடர்கிறது. இதனை எழுதியவர் பாடலாசிரியர் கார்த்திக் நேதா. கடந்த காலத்தைப் புரியாமல் கோட்டைவிட்ட ஒருவனது இன்றைய ஜென் தத்துவ வாழ்க்கைப் பார்வையை விவரிக்கின்றன இதில் இடம்பெற்ற வரிகள். ‘இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே நாளை ஓர் அர்த்தம் காட்டுமே’ என்ற வரிகள் பிரதீப் குரலில் ஒலிக்கும்போதே, ஒரு தாலாட்டின் ஓசை மனதின் அடியாழத்திலிருந்து எதிர்ப்புறத்தில் நீந்தி வருகிறது.

காதலைத் தன் வாழ்நாள் முழுக்கத் தாங்கியலையும் பெண் ஒருத்தி, தனக்குள் நிகழ்த்தும் உரையாடலைப் போல விரிகிறது ‘ஏன் ஏதும் கூறாமல் போனாய்’ பாடல். மிகச் சிறிய பாடலான இது, இந்த ஆல்பத்தில் துன்பியல் சுவை தரும் மற்றுமொரு பாடல்.

‘இரவிங்கு தீவாய் நம்மைச் சூழுமே விடியலும் இருளாய் வருமே’ என்ற உமாதேவியின் பாடல், இரண்டு காதலர்கள் மீண்டும் தனிமைச் சூழலுக்கு ஆட்படுவதை விவரிக்கிறது. இதில் சின்மயி, பிரதீப் குமார் குரல்கள் அடுத்தடுத்து வருகின்றன. இடையே, இருவரும் சேர்ந்து பாடும் வரிகள் பொதுவாக அமைந்து, பாடலின் இடையே புத்துணர்வைத் தருகின்றன. காட்சிகளாக விரியும்போது, இந்தப் பாடல் இன்னும் பெரிய வரவேற்பைப் பெறலாம் என்றே தோன்றுகிறது.

‘தாபங்களே ரூபங்களாய்த் தொடுதே படுதே’ என்ற உமா தேவியின் பாடல் வரிகளில், அந்தப் பணியை அழகாக மேற்கொள்கின்றன சின்மயி மற்றும் பிரதீப்குமாரின் குரல்கள். ஆண், பெண் குரல்கள் அடுத்தடுத்து வந்தாலும், வழக்கமான டூயட் பாடல் உணர்வைத் தராமல் மாறி மாறி இருவர் காதல் ஆவேசத்தை அமைதியாக எடுத்தியம்புவதைப் போலிருக்கிறது இந்தப் பாடல்.

மூளையில் பரவும் சிலிர்ப்பு!

இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘காதலே காதலே’ பாடல், இன்று பலரது ரிங்டோன் ஆகியிருக்கிறது. அதிரடியான இசைக்கோர்வைகள் காதுகளுக்குள் நுழையாமல், எளிதாக இடமும் வலமும் மாறியோடும் இரண்டு மனிதர்களின் ஓட்டப் பந்தயம் போலத் தொடர்கின்றன கார்த்திக் நேத்தாவின் பாடல் வரிகள். உயிரை உருக்கும் வயலின் இசை என்று எழுத்தில் படித்ததெல்லாம், இந்தப் பாடலில் உண்மையாகியிருக்கிறதோ என்று தோன்றுகிறது. அதனை இசைத்த பெருமையையும் தனதாக்கியிருக்கிறார் கோவிந்த் வசந்தா. கொஞ்சும் பூரணமே என்று தொடங்கி, காதலே காதலே தனிப்பெரும் துணையே எனும்போது, காதுகளில் தொடங்கும் சிலிர்ப்பு மூளைக்குப் பாய்கிறது. அதன் பின், நம் மனவெளியை நிரப்பும் இசை வெளியிலும் நிறைகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

சட்டென்று முடிந்த காதல் பேரனுபவம் போல, இந்தப் பாடலும் நின்று விடுகிறது நமது ஏக்கத்தை பெருக்கியபடியே. ஒவ்வொரு முறையும் இந்த அனுபவத்தைத் தரும் இந்தப் பாடல், இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பின் எப்படிப்பட்ட அனுபவத்தை உண்டாக்கும்? காதலோடு இருந்தால், கண்டிப்பாக இதே அனுபவத்தை மீட்டெடுப்போம் என்றே தோன்றுகிறது.

‘நீயில்லாம என்னால வாழ முடியாது’ என்பதே காதலர்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளும் வார்த்தைகளுள் முதன்மையானது. இதனைச் சொல்லாமல் புழுங்கிக் கிடக்கும் காதலர்கள் எண்ணிக்கை இந்த உலகத்தில் எத்தனை? யாருக்கும் தெரியாது. ஆனால், அந்த உணர்வுதான் தற்கொலைகளையும் கொலைகளையும் அதைவிடக் கொடூரமான மன விகாரங்களையும் நிகழவிடாமல் இந்த பூமிப்பந்தைப் புனிதமாக்கிக் கொண்டிருக்கிறது.

காதலைப் பூக்கவைக்கும் நல்லிசை

‘காதல் கழற்றிப்போட்ட செருப்பு, சைஸ் சரியா இருந்தா யார் வேணாலும் மாட்டிக்கலாம்’ என்ற மனோபாவமும், காதலைப் பற்றிய எண்ணங்களில் ஒன்றாகக் கலந்துள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு, தன் மனதிலுள்ள காதலை வெளியிலெடுத்து அழகு பார்க்கும் அனுபவம் புரியாது. ஒருவகையில், 2018இல் வாழ்ந்துவரும் மக்களின் மனதில் காதலுணர்வு எந்த அளவுக்கு உள்ளது என்பதைச் சோதிக்கும் அளவுகோலாகவே 96 திரைப்படத்தை, அதில் இடம்பெற்றுள்ள பாடல்களை, அதில் பங்கேற்ற தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு பெறப்போகும் வெற்றிகளைக் காண்கிறேன்.

காதல் எத்தனை முறை வருமென்பதோ, எப்போது வருமென்பதோ, மனிதர்கள் எவருக்கும் தெரியாத பெரும் புதிர். ஆனால், காதல் வந்த பிறகு ஒவ்வொரு மனிதருக்கும் சிறகுகள் முளைக்கின்றன. இதயப் பரப்பு பெரிதாகிறது. உள்ளுக்குள் பிரவாகமெடுக்கும் அருவமான அந்த உணர்வு, இந்தப் பிரபஞ்ச வெளியெங்கும் பரவுகிறது. காதலைப் பூக்கவைக்கும் எந்த ஒலியும் எப்போதும் நல்லிசைதான்!

96 படத்தின் இசையும் அப்படித்தான்.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon