மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

தங்க தமிழ்ச்செல்வன் தூதுவிடுகிறார்: அமைச்சர்

தங்க தமிழ்ச்செல்வன் தூதுவிடுகிறார்: அமைச்சர்

அதிமுகவில் சேருவதற்காக தங்க தமிழ்ச்செல்வன் தூதுவிடுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று (செப்டம்பர் 13) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, “அமைச்சர்கள் மீது ஊழல் புகார் இருந்தால் சட்டமன்றத்திலேயே தினகரன் கூறியிருக்கலாம். அதைவிடுத்து, மாங்காய் புளித்ததோ, வாய் புளித்ததோ என்று கூறுபவர்களுக்குப் பதிலளிக்க முடியாது.

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவருவது மத்திய அரசின் கையில்தான் உள்ளது. விலை ஏற்றத்தால் எழுந்துள்ள மக்கள் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் மாநில அரசின் மீது பழி போடப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.

மேலும் “தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் சேர தூதுவிட்டு வருகிறார். இங்கிருந்து சரியான பதில் அவருக்குக் கிடைக்கவில்லை. எப்படியாவது அதிமுகவில் சேர வேண்டும் என்பதற்காக தேர்தல் சவால்களை விட்டுவருகிறார்” என்று தெரிவித்தார்.

அண்மையில் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன், “திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றிபெற்றால் அவர்களுடன் செல்லத் தயார். அதிமுக தோல்வியடைந்தால் அவர்கள் எங்களுடன் வரத் தயாரா?” என்று சவால் விடுத்திருந்தார்.

இந்தச் சவாலுக்கு அமைச்சர் உதயகுமார், “தங்க தமிழ்ச்செல்வன் சவால்விட அவசியமில்லை, அவர் அதிமுகவில் இணைந்தால் வரவேற்க முதல்வரும் துணை முதல்வரும் தயாராக உள்ளனர்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon