மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

டிஜிட்டல் திண்ணை: சின்சியாரிட்டியா, சீனியாரிட்டியா? ஸ்டாலின் முடிவு!

டிஜிட்டல் திண்ணை: சின்சியாரிட்டியா,  சீனியாரிட்டியா? ஸ்டாலின் முடிவு!

மொபைலில் டேட்டா ஆன் செய்தோம். ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் அப்டேட் ஆகியிருந்தது.

"ஆகஸ்ட் 21ஆம் தேதி டிஜிட்டல் திண்ணை நினைவில் இருக்கிறதா?

‘துரைமுருகன் தற்போது முதன்மைச் செயலாளர் என்ற பொறுப்பில் இருக்கிறார். அது துரைமுருகனுக்காக உருவாக்கப்பட்டதுதான். எப்படிச் செயல் தலைவர் என்ற நிலைக்கு ஸ்டாலினுக்குப் பிறகு யாரும் கிடையாதோ அதேபோல முதன்மைச் செயலாளர் பதவியையும் அப்படியே விட்டுவிடலாம் என்பதுதான் முதலில் பேசப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அந்தப் பதவியை டி.ஆர்.பாலுவுக்குக் கொடுக்கலாம் என்ற ஆலோசனையும் நடந்துவருகிறது.

‘எல்லோரையும் சமாதானப்படுத்தி அரவணைத்துப் போயிடலாம். எந்தச் சிக்கலும் கட்சிக்குள் வரக் கூடாது...’ என்று ஸ்டாலின் சொல்லிவருவதுடன், ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்துவருகிறார்.'' இதுதான் அன்று வாட்ஸ் அப் சொன்னது. அது இன்று நடந்திருக்கிறது. வாட்ஸ் அப்புக்கு ஹேட்ஸ் ஆஃப்.

கலைஞர் நினைவிடத்தில் டி.ஆர்.பாலு அஞ்சலி செலுத்திய பிறகு, '1974ஆம் ஆண்டு பிரிக்கப்படாத சென்னை மாவட்டத்தின் துணைச் செயலாளராகவும் 1976க்கு பிறகு அதே மாவட்டத்தின் செயலாளராகவும் ஏறத்தாழ 11 ஆண்டுக் காலம் பணியாற்றிய எனக்கு இன்று இந்தப் பொறுப்பைத் தலைவர் ஸ்டாலின் தற்போது வழங்கியுள்ளார். கலைஞர் எனக்கு எண்ணற்ற பொறுப்புகளைக் கொடுத்துள்ளார். ஆனால், தலைவர் ஸ்டாலின்தான் எனக்குக் களத்தில் பயிற்சியைக் கொடுத்தார். இந்த மாபெரும் இயக்கத்தை ஒருங்கிணைக்க எனக்கு இந்தப் பொறுப்பைக் கொடுத்துள்ளனர். தலைவர் கலைஞர் அவர்கள் இருந்தபோது நான் எப்படி மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிவந்தேனோ அதே போல் இன்றும் நான் பணியாற்ற எனக்கு ஸ்டாலின் பயிற்சி அளிப்பார். இந்தப் பொறுப்பை நிறைவேற்றி, தலைவர் ஸ்டாலின் என் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்' என்று உருகினார் டி.ஆர்.பாலு.

இந்த தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் பதவிக்கு இப்போது துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் ஐ.பெரியசாமி, திருச்சி மாவட்டச் செயலாளராகப் பல ஆண்டுகளாக இருக்கும் கே.என். நேரு ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாக செய்திகள் வந்தன. ஸ்டாலினோடு நெருக்கமாக இருக்கும் எ.வ.வேலுவின் பெயர்கூடக் கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டது.

ஆனால் ஸ்டாலின் சீனியாரிட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்து டி.ஆர். பாலுவை டிக் செய்திருக்கிறார் . கலைஞரும் இதேபோன்ற நிலைகளில் சீனியாரிட்டிக்குதான் முக்கியத்துவம் கொடுத்துவந்திருக்கிறார். அவரது அருகே இருந்து பாடம் கற்ற ஸ்டாலினும் சீனியாரிட்டிக்கே முக்கியத்துவம் கொடுப்பது என்று முடிவெடுத்திருக்கிறார். அந்த வகையில்தான் 74 முதல் கட்சியில் மாவட்டப் பொறுப்பில் இருந்து வரும் டி.ஆர்.பாலுவுக்கு முதன்மைச் செயலாளர் பொறுப்பைக் கொடுத்திருக்கிறார்.

அதே நேரம் பொறுப்புகளை எதிர்பார்த்திருக்கும் தனக்கு சின்சியரானவர்களையும் ஸ்டாலின் விட்டுவிடுவதாக இல்லை. முப்பெரும் விழாவுக்குப் பிறகு கட்சியின் அமைப்புச் செயலாளர்கள், துணைப் பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் ஸ்டாலினிடம் இருக்கிறது. அந்தப் பதவிகளில் சீனியர்களை மட்டுமல்லாமல் தனக்கு சின்சியராக இருப்பவர்களையும் நியமிக்கும் முடிவில் இருக்கிறார் ஸ்டாலின்" என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.

தொடர்ந்து மெசேஜ் ஒன்றை டைப்பிங் செய்தது வாட்ஸ் அப். "தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பருவமழை குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, மீன் வளத் துறை அமைச்சர் ஜெயகுமார், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பருவமழை பற்றி ஆலோசனை நடந்தாலும் கூட்டம் முடிந்த பிறகு எடப்பாடியும் பன்னீரும் மட்டும் பேசினார்களாம். அப்போது எடப்பாடியிடம் பன்னீர் சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்.

'நம்ம கட்சி நிர்வாகி ஒருத்தர் மூலமாக ஒரு புகார் வந்திருக்கு. தி.நகர் தொகுதி எம்.எல்.ஏ. சத்யா பற்றித்தான் அந்தப் புகார். அவர் திருப்பதியில் ஒரு வீடு வாங்கியிருக்காரு. அந்த வீட்டு முகவரியில் ஒரு வோட்டர் ஐடி வாங்கி இருக்காரு சத்யா. அதாவது அவருக்குத் திருப்பதியில் ஒரு ஓட்டு இருக்கு. இங்கே சென்னையில் ஒரு ஓட்டு இருக்கு. இரண்டு இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை வெச்சிருக்காரு. சொத்துகள் தொடர்பான சிக்கலிலும் ஆதாரத்துடன் மாட்டியிருக்காரு. இதெல்லாம் வெளியில் தெரிஞ்சா நம்ம கட்சிக்குக் கெட்ட பேரு. இதை வெச்சு கோர்ட்டுக்குப் போனால் அவரோட பதவியே செல்லாது. அதனால அவரை விசாரிக்கணும்..' என்று சொல்லி சத்யா தொடர்பான ஆதாரங்களையும் கொடுத்திருக்கிறார். அதைப் பார்த்த பழனிசாமி, ' அவரைக் கூப்பிட்டு விசாரிங்க...' என்று சொல்லிவிட்டாராம். சத்யாவிடம் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக விரைவில் விசாரணை நடத்தப் போகிறாராம் பன்னீர்

தலைமைக் கழகத்திலோ தி.நகர் சத்யா மீது இந்தப் புகார் சுமார் நான்கைந்து மாதங்களுக்கு முன்பே வந்தது. அப்போதே உரியவர்களுக்கு புகார் அனுப்பப்பட்டது. நான்கைந்து மாதங்கள் முன்பு அனுப்பிய புகார் பற்றியே இப்போதுதான் பேசிவருகிறார்களாக்கும். இவங்க நடவடிக்கை எடுத்த மாதிரிதான் என்று அலுத்துக்கொள்கிறார்கள்" என்று முடிந்தது மெசேஜ்.

அதைக் காப்பி செய்து ஷேர் செய்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

வெள்ளி, 14 செப் 2018

அடுத்ததுchevronRight icon