மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 1 டிச 2020

தனி அமைப்பு? அழகிரி பதில்!

தனி அமைப்பு? அழகிரி  பதில்!

மு.க. அழகிரி விரைவில் தனி அமைப்பு தொடங்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதை அழகிரி மறுத்துள்ளார்.

மறைந்த முதல்வர் கலைஞரின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி மீண்டும் திமுகவில் இணைவதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். தன்னை கட்சியில் சேர்த்துக்கொண்டால் மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளத் தயார் என்றும் அவர் கூறினார். கடந்த 5ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் கலைஞர் நினைவிடம் நோக்கி பேரணி சென்றார். எனினும், அவரை மீண்டும் கட்சிக்குள் இணைத்துக்கொள்வதற்கு திமுக தலைமை தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், அதிருப்தியில் உள்ள அழகிரி, இடைத்தேர்தல்களில் திமுக தோல்வியைத் தழுவும் என்று கூறிவருகிறார்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அழகிரியின் ஆதரவாளர் இசக்கி முத்து, “இடைத்தேர்தலுக்குப் பிறகு அழகிரியின் செல்வாக்கை திமுக புரிந்துகொள்ளும். நாங்கள் தனிக்கட்சி தொடங்கப்போவதில்லை, அதேவேளையில், தனி அமைப்பைத் தொடங்கி திமுகவுக்கு பாடம் புகுட்டுவோம். 2 மாதங்களில் தனி அமைப்பு உருவாகும்” என்று கூறினார். திமுகவில் சேர்வது மட்டுமே தனது கோரிக்கை பதவி வேண்டாம் என்று அழகிரி கூறிவந்த நிலையில், தனி அமைப்பை அழகிரி தொடங்கப் போகிறார் என்று அவரது ஆதரவாளர் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அழகிரியிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, இந்த செய்தியை மறுத்த அழகிரி, “கலந்துரையாடல்கள் மட்டுமே நடைபெற்றுள்ளது” என்று கூறினார்.,

திமுகவில் உங்களை சேர்க்க தயங்குவது ஏன் என்ற கேள்விக்கு, “அதை அங்கு சென்று கேளுங்கள். அவரிடம்(ஸ்டாலின்) கேட்க வேண்டிய கேள்வி அது. என்னை கேட்க வேண்டிய கேள்வியல்ல” என்று பதிலளித்தார்.

இதேபோல், உசிலம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த மு.க. அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியிடம் தனி அமைப்பு தொடங்குவது குறித்து செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தயாநிதி, “தனி அமைப்பு தொடங்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆதரவாளர்களுடன் பேசிக்கொண்டு மட்டுமே உள்ளோம். மற்றபடி, தனி அமைப்பு தொடங்கப்போகிறோம் என்பது இசக்கி முத்துவின் தனி கருத்து. அப்பாவின் கருத்தல்ல அது” என்று பதிலளித்தார்.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon