மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 31 மே 2020

மெட்ரோ: ஒரு வாரத்தில் மூன்று பாதிப்புகள்!

மெட்ரோ: ஒரு வாரத்தில் மூன்று பாதிப்புகள்!

சிக்னல் கோளாறு காரணமாக, ஒரு வாரத்தில் மட்டும் மூன்றாவது முறையாக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரலிலிருந்து பரங்கிமலை வரை, விமான நிலையத்திலிருந்து டிஎம்எஸ் வரை என்று இரு வழிதடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயிலில் அதிக மக்கள் பயணிப்பதற்குப் பாதுகாப்பு நடவடிக்கைகள் உட்படப் பலவற்றை செய்து வருகிறது மெட்ரோ நிர்வாகம். ஆனால், மெட்ரோ சேவையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாதிப்பு ஏற்படுவது தொடர்கிறது. இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 12) அன்று காலை 9 மணியளவில் எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால், பரங்கிமலை செல்ல வேண்டிய மெட்ரோ ரயில் அங்கேயே நின்றது. அதே நேரத்தில் எழும்பூர் நோக்கி வந்த ரயில்கள் பிற மெட்ரோ ரயில் நிலையங்களில் நின்றன.

இதையடுத்து, உடனடியாக சிக்னல் கோளாறை சரி செய்தனர் மெட்ரோ ரயில் ஊழியர்கள். 10 நிமிடத்துக்குப் பின்னர் ரயில் சேவை சீரானது. அதேபோன்று கடந்த 11ஆம் தேதியன்று இரவு திருமங்கலம் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, ஒரு மணி நேரத்துக்குப் பின்னர்தான் சேவை சீரானது. கடந்த 8ஆம் தேதியும் சிக்னல் கோளாறு காரணமாகச் சேவை பாதிக்கப்பட்டது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று முறை மெட்ரோ ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பது குறித்து, அந்நிறுவனத்தின் பொறியியல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து மெட்ரோ பயணி பிரகாஷ் கூறுகையில், “மெட்ரோ ரயில் நங்கநல்லூர் சாலை அருகே நின்றது. அதாவது, மீனம்பாக்கம் நிலையத்தில் நீண்ட நேரமாக நின்றது. சென்னை விமான நிலையத்தில் ஏறிய நான் கோயம்பேடுக்குச் செல்ல வேண்டும். அதனால், பலருடன் சேர்ந்து நானும் ரயிலை விட்டு இறங்கினேன். மெட்ரோ ரயிலுக்காக, அதிக நேரம் காத்திருக்க முடியாது. அதிகக் கட்டணம் இருந்தாலும், போக்குவரத்து நெரிசலுக்கு பயந்துதான் மெட்ரோ ரயிலில் பயணிக்கிறோம். ஆனால், இந்த நாள் எனக்கு தலைவலியோடு முடிந்தது” என்று தெரிவித்தார்.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon