மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 7 ஜூலை 2020

திமுக குடும்பக் கட்சிதான்!

திமுக குடும்பக் கட்சிதான்!

திமுக குடும்பக் கட்சிதான் எனத் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், “முப்பெரும் விழாவிற்கு தொண்டர்கள் அனைவரும் குடும்பம் குடும்பமாக வர வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

திமுகவின் முப்பெரும் விழா விழுப்புரத்தில் வரும் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், மும்பை தேவதாசனுக்கு பெரியார் விருதும் பொன்.ராமகிருஷ்ணனுக்கு அண்ணா விருதும் குத்தாலம் பி.கல்யாணத்திற்கு கலைஞர் விருதும் புலவர் இந்திரகுமாரிக்கு பாவேந்தர் விருதும் மா.செங்குட்டுவனுக்கு பேராசிரியர் விருதும் வழங்கப்படவுள்ளது. இந்நிலையில், முப்பெரும் விழாவில் தொண்டர்கள் குடும்பம் குடும்பமாக பங்கேற்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தொண்டர்களுக்கு இன்று(செப்டம்பர் 13) எழுதியுள்ளது கடிதத்தில், “உங்களுக்கு நானும், எனக்கு நீங்களும் தோளோடு தோள் நின்று இயக்கத்தை கலைஞர் பாணியில் கட்டிக் காப்பதே அவருக்கும் நாம் செய்கிற உண்மையான அஞ்சலியாகும். அந்த உத்வேகம் மேலிட உணர்ச்சிப் பெருக்கோடு நடைபெற உள்ளது முப்பெரும் விழா!

மத்தியிலும் - மாநிலத்திலும் நடைபெறுகிற மக்கள் விரோத - ஜனநாயக விரோத அரசுகள் தூக்கி எறியப்பட வேண்டும். அதற்கான அமைதியான அறநெறிக் களத்திற்கு நாம் தயாராக வேண்டும். தோழமை சக்திகள் துணை நிற்கின்றன.

நாடு எதிர்கொண்டுள்ள சவாலை நாம் அறிவோம். அதனைச் சந்திக்க ஆயத்தமாகவும் ஆர்வத்துடனும் இருக்கிறோம் என்ற சூளுரையை மேற்கொள்ள விழுப்புரத்தில் கூடிடுவோம்” என்று அழைப்பு விடுத்துள்ளார்.

பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் தலைமையில் நடைபெறவிருக்கிற முப்பெரும் விழாவில், பொருளாளர் துரைமுருகன், துணைப்பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். விருதுகள் வழங்கிச் சிறப்புரை ஆற்றும் வாய்ப்பு தனக்கு வழங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ள ஸ்டாலின், “மூத்தோரும் இளையோரும் உடன்பிறப்புகள் என்ற உயர்வால் இணைந்து பங்கேற்கும் முப்பெரும் விழாவில், கழகம் காத்திட உழைத்தோருக்கு விருது வழங்கிச் சிறப்பிப்பது தலைவர் கலைஞர் உருவாக்கித் தந்த வாஞ்சைமிகு வழக்கம். அதனைச் சிறப்புறத் தொடர வேண்டும் என்ற எண்ணத்துடன், இந்த விழாவிலும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

திமுகவை சிலர் குடும்பக் கட்சி என்று விமர்சனம் செய்யும்போது, அவர்களின் அறியாமையை எண்ணி மனதுக்குள் சிரித்துக் கொள்வேன். இது குடும்பக் கட்சி தான். குடும்பம் குடும்பமாக இலட்சோப இலட்சம் குடும்பங்கள் கட்சி விழாவில் பங்கேற்கிற பெருமைமிகு தொண்டர்களை இந்த இயக்கத்தைத் தவிர வேறெந்த இயக்கத்தில் காண முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “மூன்று தலைமுறையாக நாங்கள் திமுக குடும்பம் என்று சொல்லிக் கொள்வோர் நெஞ்சில்தான் எத்தனை பெருமிதம். என் தாத்தா - பாட்டி, அம்மா - அப்பா, நானும் என் உடன்பிறந்தோரும் திமுகவினர்தான் என்று பெருமைப்படக்கூடிய தொண்டர்களைக் கொண்ட இயக்கம் இது.

தமிழ்நாட்டில் வாழ்வோர் அனைவரையும் தன் குடும்பமாக நினைக்கின்ற இயக்கம். உலகில் வாழும் தமிழர்களையெல்லாம் உடன்பிறப்புகளாகக் கருதிப் போற்றுகிற இயக்கம்” என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், விழுப்புரம் முப்பெரும் விழாவிற்கு தொண்டர்கள் அனைவரும் குடும்பம் குடும்பமாக கலந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon