மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

அதிகரிக்கும் வங்கிக் கடன்!

அதிகரிக்கும் வங்கிக் கடன்!

வங்கிக் கடன் விகிதம் 13.49 விழுக்காடு அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆகஸ்ட் 31ஆம் தேதி கணக்குப்படி இந்திய வங்கிகள் வழங்கியுள்ள கடன் மதிப்பு ரூ.87,89,259 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 13.49 விழுக்காடு அதிகமாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வங்கிக் கடன் அளவு ரூ.77,44,237 கோடியாக மட்டுமே இருந்தது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி கணக்குப்படி வங்கிகள் வழங்கியுள்ள கடன் மதிப்பு ரூ.86,75,129 கோடியாக உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

டெபாசிட்டை பொறுத்தவரையில் 8.88 விழுக்காடு வளர்ச்சி காணப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31ஆம் தேதி கணக்குப்படி ரூ.116,45,870 கோடி மதிப்பிலான தொகை வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த பணத்தின் மதிப்பு ரூ.106,96,099 கோடியாக மட்டுமேயிருந்தது என்றும் ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்தில் கடன் வழங்கப்பட்ட துறைகளைப் பொறுத்தவரையில், உணவுப் பொருட்கள் சாராத துறைகளில் வழங்கப்பட்ட கடன் மதிப்பு 10.6 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. வேளாண் துறைகளுக்கு வழங்கப்பட்ட கடன் மதிப்பு 6.6 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு ஜூலையில் வேளாண் துறைக்கு வழங்கப்பட்ட கடன் மதிப்பு 6.8 விழுக்காடு வளர்ச்சி கண்டிருந்தது. சேவைத் துறைகளுக்கு வழங்கப்பட்ட கடன் இந்த ஆண்டு ஜூலையில் 23 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் இதன் மதிப்பு 4.9 விழுக்காடாக மட்டுமே இருந்தது. தனி நபர் கடன்களைப் பொறுத்தவரையில் இந்த ஆண்டு ஜூலையில் 16.7 விழுக்காடு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon