மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

பேமண்ட் வங்கிகளில் மந்தமான டெபாசிட்!

பேமண்ட் வங்கிகளில் மந்தமான டெபாசிட்!

இந்தியாவில் இயங்கும் பேமண்ட் வங்கிகளில் ரூ.540 கோடி மட்டுமே டெபாசிட் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் ஏர்டெல், பேடிஎம், ஃபினோ மற்றும் போஸ்ட் பேமண்ட் பேங்க் உள்ளிட்ட 4 பேமண்ட் வங்கிகள் இயங்குகின்றன. இவற்றில் ஏர்டெல் பேமண்ட் வங்கியில் ரூ.307 கோடியும், பேடிஎம் பேமண்ட் வங்கியில் ரூ.193 கோடியும், ஃபினோ பேமண்ட் வங்கியில் ரூ.38 கோடியும், போஸ்ட் பேமண்ட் வங்கியில் ரூ.1.4 கோடியும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக ரூ.540 கோடி பேமண்ட் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு சில பெரிய வங்கிக் கிளைகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணத்தைக் காட்டிலும் குறைவானதாகும்.

இந்திய வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணத்துடன் ஒப்பிடும்போது, இது 0.005 விழுக்காட்டை விடக் குறைவாகும். ஒட்டுமொத்தமாக இந்திய வங்கிகளில் ரூ.115 லட்சம் கோடி மதிப்புள்ள பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் டெபாசிட் தொகையை பல மடங்கு அதிகரிக்க பேடிஎம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதன்மைத் தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லால் கடந்த 18 மாதங்களுக்கு முன்பு இந்தியாவின் முதல் பேமண்ட் வங்கி தொடங்கப்பட்டது. இரண்டாவதாக ஃபினோ நிறுவனம் பேமண்ட் வங்கியைத் தொடங்கியது.

பேமண்ட் வங்கி தொடங்க 11 நிறுவனங்கள் இந்திய ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கேட்டிருந்தன. அதில் 3 நிறுவனங்கள் இத்திட்டத்தைக் கைவிட்டுவிட்டன. பேமண்ட் வங்கிக் கணக்குகளில் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மட்டுமே டெபாசிட் செய்ய இயலும். பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட ஜன் தன் வங்கிக் கணக்குகளிலும் ரூ.1 லட்சம் வரையில் மட்டுமே டெபாசிட் செய்ய இயலும். இந்தத் திட்டத்தில் இதுவரையில் 32 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டு ரூ.82,000 கோடிக்கும் அதிகமாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இதுவரையில் 25,000 டெபிட் கார்டுகளும் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon