மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 31 மே 2020

அச்சுறுத்தும் பூச்சித் தாக்குதல்!

அச்சுறுத்தும் பூச்சித் தாக்குதல்!

பிங்க் போல்வார்ம் பூச்சித் தாக்குதலால் காரிஃப் பருவ பயிர்கள் பெருமளவு சேதமடையும் வாய்ப்பு இருப்பதாக வேளாண் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

காரிஃப் பருவத்துக்கான விதைப்புப் பணிகள் நாடு முழுவதும் முடிந்துள்ளன. தெலங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சோளப் பயிர்களை பிங்க் போல்வார்ம் பூச்சிகள் தாக்கியுள்ளன. இதை உடனடியாகக் கட்டுப்படுத்தாவிட்டால் வேகமாகப் பரவி பருத்தி, முட்டைக்கோஸ், கரும்பு மற்றும் சோயாபீன் உள்ளிட்ட மற்ற பயிர்களையும் சேதப்படுத்தும் என்று வேளாண் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்தப் பூச்சிகள் முதலில் இழைகளைத்தான் சேதப்படுத்தும். பூச்சித் தாக்குதலால் இழைகள் சேதமடைந்திருப்பதைக் கண்டால் உடனடியாக இழைகளை வெட்டி அப்புறப்படுத்தினால் சேதத்தின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து ஆந்திராவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் பிசினஸ் லைன் ஊடகத்திடம் பேசுகையில், “ஆப்ரிக்காவில் இருந்து இந்து பூச்சிகள் இந்தியாவுக்குப் பரவியிருப்பதாக கூறப்படுகிறது. முதலில் கர்நாடகாவில் இந்த பூச்சித் தாக்குதல் கண்டறியப்பட்டது. அடுத்து தெலங்கானா, ஆந்திராவிலும் பரவிவிட்டன. இந்தப் பூச்சிகள் 80 முதல் 100 பயிர்களை சேதப்படுத்தும்” என்றார். இந்தியாவில் 9 மில்லியன் ஹெக்டேரில் சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட அளவு விலங்குகளுக்கான உணவாகவும் செல்கிறது. தெலங்கானாவில் மட்டும் 17 மாவட்டங்களில் போல்வார்ம் பூச்சித் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது.

வேளாண் ஆராய்ச்சியாளர் ராமாஞ்சநேயலு கூறுகையில், “இந்தப் பூச்சித் தாக்குதல் எப்போதாவது நிகழும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் குறைந்த காலத்தில் அதிக மழை பெய்துள்ளது. இதனால் இந்த ஆண்டு சோளம் விதைப்பு பரப்பளவு அதிகரித்துள்ளது. பூச்சித் தாக்குதலை எதிர்கொள்ள பல்வேறு மாற்று மேலாண்மை பயிற்சிகள் உள்ளன” என்றார்.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon