மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 அக் 2019

புற்றுநோய்: 1.80 கோடி பேர் இறக்கும் அபாயம்!

புற்றுநோய்: 1.80 கோடி பேர் இறக்கும் அபாயம்!

புற்றுநோயால் நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் 1 கோடி பேர் இறக்க நேரிடும் என்று சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

அண்மையில் சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வில், நடப்பாண்டில் மட்டும் 1.80 கோடி பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் சுமார் 1 கோடி பேர் இந்த ஆண்டு உயிரிழக்க நேரிடும் என இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் 1.40 கோடி பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 லட்சம் பேர் உயிரிழந்தாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பெரும்பாலும் ஆரோக்கியமற்ற உணவு முறை, பதப்படுத்தப்பட்ட உணவுகள், புகை மற்றும் மதுப் பழக்கம், உடல் உழைப்பு இல்லாமை மற்றும் காற்று மாசுபாடு ஆகிய காரணங்களால் புற்றுநோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் புதிதாகக் கண்டறியக்கூடிய புற்றுநோய்கள், கட்டுப்படுத்தக்கூடியவையாக இருப்பதாகக் கூறுகின்றனர் ஆய்வாளர்கள். வாழ்நாளில் ஆண்களில் 5 பேரில் ஒருவரும், பெண்களில் 6 பேரில் ஒருவரும் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 21ஆம் நூற்றாண்டில் புற்றுநோய் மட்டுமே உயிர்க்கொல்லியாக இருக்குமென உலக சுகாதார நிறுவனமும் கவலை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும், இவர்களில் ஏழு லட்சம் பேர் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும் ஒரு புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon