மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

ஆசியக் கோப்பைக்கு தயாராகும் இந்தியா!

ஆசியக் கோப்பைக்கு தயாராகும் இந்தியா!

ஆறு முறை ஆசியச் சாம்பியனான இந்தியா இந்த ஆண்டும் ஆசியக் கோப்பை தொடரில் தனது ஆதிக்கத்தைத் தொடர காத்திருக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஆசியக் கோப்பை தொடர், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களாக மாறிமாறி நடத்தப்படும் என 2015ஆம் ஆண்டு ஐசிசி அறிவித்திருந்தது. அதன்படி 2016ஆம் ஆண்டு டி20 வடிவில் நடத்தப்பட்ட ஆசியக் கோப்பைத் தொடரில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. தற்போது ஒருநாள் வடிவில் நடத்தப்படவுள்ள இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் ,இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் உள்ளிட்ட ஆறு அணிகள் பங்கேற்கவுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் 1984ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடங்கப்பட்டது. இந்தத் தொடரில் இதுவரை இந்தியா 6 முறையும், இலங்கை 5 முறையும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளன. மற்றொரு முக்கிய அணியான பாகிஸ்தான் 2 முறை கோப்பையை வென்றுள்ளது.

ஆசியக்கோப்பை தொடரில் சமீப காலமாக இந்தியாவின் செயல்பாடு திருப்தியளிக்கும் வகையில் அமையவில்லை. 1984ஆம் ஆண்டு இந்தியா முதல் சாம்பியன் பட்டத்தை வென்றபிறகு அடுத்த இருமுறை இலங்கை தொடர்ந்து சாம்பியன் ஆனது. அப்போது தொடர் இலங்கையில் நடத்தப்பட்டதால் அரசியல் பிரச்சினைகள் காரணமாக இந்தியா அதில் பங்கேற்க முடியாமல் போனது. பின்னர் வரிசையாக அடுத்த மூன்று தொடர்களையும் இந்தியா வென்று ஹாட்ரிக் சாம்பியன் ஆனது.

1994ற்குப் பிறகு நடைபெற்ற அடுத்த 4 தொடர்களில் இந்தியா சரியாக செயல்படவில்லை. அதில் இலங்கை 3 முறையும் பாகிஸ்தான் 1 முறையும் சாம்பியன் ஆகியிருந்தன. 2010ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று தொடர் சொதப்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அதன்பிறகு 6 ஆண்டுகள் கழித்து 2016ஆம் ஆண்டு தொடரில் இந்தியா ஒரு போட்டியில்கூட தோற்காமல் சாம்பியன் பட்டத்தை வென்றது.

2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான் இம்முறையும் அதே சர்ஃப்ராஸ் கானின் தலைமையில் களம் காண உள்ளது. செப்டம்பர் 19ஆம் தேதியன்று நடக்கவுள்ள போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் நேருக்குநேர் மோதவுள்ளன. இந்திய அணியின் முக்கிய வீரராகக் கருதப்படும் விராட் கோலிக்கு இந்தத் தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டது மற்ற அணிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. கோலியின் ஓய்வால் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு ரோஹித் ஷர்மாவை சென்றடைந்துள்ளது.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon