மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 25 பிப் 2020

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை!

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை!

இன்னும் இதுபோன்ற தலைப்புகள் செய்திகளிலிருந்து அகலவில்லை. சமூகம் எவ்வளவுதான் முன்னேற்றம் அடைந்தாலும், இன்னும் இதுபோன்ற பிற்போக்குத்தனங்களால் பின்னுக்குத்தள்ளப்பட்டு வருகிறது பெண் சமூகம்.

சென்னை பெரும்பாக்கத்தில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோழிங்கநல்லூரை அடுத்த பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த பார்கவி (எ) ரோகினி என்பவருக்கும் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் 3 வருடத்திற்கும் முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அஸ்மிதா என்ற 2 வயது குழந்தை உள்ளது.

சுரேஷ் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 1 வருடமாக வரதட்சணை கேட்டு மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளதாக தெரிகிறது.

திருமணத்தின் போது பெண் வீட்டார் சார்பாக 50 பவுன் தங்க நகை, வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், இரு சக்கர வாகனம், ஒரு கார், ரூ. 5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, திருமணமாகி ஒரு வருடத்தில் பெண் குழந்தை பிறந்ததால் சுரேஷ் வீட்டாரைச் சேர்ந்தவர்கள் ஆண் குழந்தை பிறக்கவில்லை என பார்கவியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மனைவியின் அப்பாவிடம் உடனடியாக 5 லட்சம் பணம், பெரிய கார் & சொந்தமாக பிளாட் கேட்டு போனில் மிரட்டி உள்ளார் சுரேஷ். நேற்று இரவு (செப்,12) பெற்றோர்களிடம் கணவர் அடித்து துன்புறுத்துவதாக போனில் தெரிவித்துள்ளார் பார்கவி.

இதனால், மிகவும் மன உளைச்சலில் இருந்த பார்கவி வீட்டில் யாரும் இல்லாதபோது மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், பார்கவியின் பெற்றோர்கள் மீண்டும் போன் செய்த போது பார்கவி போனை எடுக்காததால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் அளிக்க, தூக்கிட்ட நிலையில் இருந்த பார்கவியின் உடலை பார்த்த அவர்கள் உடனடியாக பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

போலீசார் பார்கவியின் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதே அறையில் அழுது கொண்டிருந்த அவரின் 2வயது குழந்தை அஸ்மிதாவும் மீட்கப்பட்டார்.

பார்கவியின் கணவர் சுரேஷ் தலைமறைவாகி விட்டார். பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சுரேஷை தேடி வருகிறார்கள்.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon