மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 19 ஜன 2020

புழல்: சிறைத் துறை ஏடிஜிபி ஆய்வு!

புழல்: சிறைத் துறை ஏடிஜிபி ஆய்வு!

சென்னை புழல் சிறையில் கைதிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு வசதிகள் செய்துகொடுத்த விவகாரம் தொடர்பாக, இன்று (செப்டம்பர் 13) ஆய்வு மேற்கொண்டார் தமிழக சிறைத் துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா.

சில நாட்களுக்கு முன்பாக, புழல் சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவரது அறையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. சொகுசி விடுதியிலுள்ள அறைகளைப் போல, அந்த அறையில் பல வசதிகள் இடம்பெற்றிருந்தன. இது குறித்து சர்ச்சை எழுந்தது. சிறை வளாகத்திலும் அந்த கைதி புகைப்படம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக, இன்று தமிழக சிறைத் துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா மற்றும் டிஐஜி கனகராஜ் சென்னை புழல் சிறையில் ஆய்வு மேற்கொண்டனர்.

கைதிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு வசதிகள் செய்துகொடுத்த சிறைத் துறைப் பணியாளர்கள் யார் என்பது குறித்து விசாரணை செய்தனர். இந்த ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் அசுதோஷ் சுக்லா. அப்போது, தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் ஒரு மாதத்துக்கு முன்னர் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

“இது தொடர்பாக நாங்கள் தொடர் விசாரணை நடத்தி வருகிறோம். ஒரு வாரத்துக்கு முன்புதான், சிறையில் இருந்த செல்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் யார்? லஞ்சம் வாங்கிக்கொண்டு செல்போன் உள்ளிட்ட பொருட்களைத் தந்தது யார் என்று விசாரணை செய்து வருகிறோம்” என்று கூறினார் அசுதோஷ் சுக்லா.

சிறை வளாகத்தினுள் அன்றாட உபயோகப் பொருட்கள், மது உள்ளிட்ட போதைபொருட்கள், செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்புக் கருவிகள் கைதிகளுக்கு வழங்கப்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகின்றன. தமிழகத்திலுள்ள சிறைகளில் அவ்வப்போது நடைபெறும் ஆய்வுகள் இதுபற்றிய தகவல்களை வெளிக்கொணர்கின்றன.

கடந்த மே 19ஆம் தேதியன்று, இதேபோல புழல் சிறையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார் ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா. போதைப்பொருட்கள் சிறையில் கிடைக்கின்றனவா என்று திடீர் ஆய்வை மேற்கொண்டவர், அங்கிருந்த அதிகாரிகளிடம் சிறைத் துறை வசதிகள் பற்றிக் கேட்டறிந்ததாகத் தகவல்கள் வெளியானது.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon