மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 27 மே 2020

அதிமுக விதிகள் வழக்கு: ஈபிஎஸ், ஓபிஎஸ்ஸுக்கு உத்தரவு!

அதிமுக விதிகள் வழக்கு: ஈபிஎஸ், ஓபிஎஸ்ஸுக்கு உத்தரவு!

அதிமுகவின் விதிகள் திருத்தப்பட்டது தொடர்பான வழக்கில் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் 3 வாரங்களுக்குள் தேர்தல் ஆணையத்தில் பதிலளிக்க வேண்டுமென டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவில் எடப்பாடி-பன்னீர் அணிகள் இணைந்த பிறகு நடைபெற்ற பொதுக் குழுவில் கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி, பொதுச் செயலாளர் பதவி ரத்து செய்யப்படுவதாகவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கொண்டு வரப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றபட்டது.

ஆனால் இதற்கு எதிராக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி காமேஸ்வர் ராவ், கே.சி. பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவை இந்திய தேர்தல் ஆணையம் 4 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி ஈபிஎஸ், ஓபிஎஸ் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், கே.சி.பழனிசாமியை பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை செப்டம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

அதன்படி இன்று (செப்டம்பர் 13) இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோரின் கோரிக்கையை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது. விதிகள் திருத்தியமைக்கப்பட்டது தொடர்பாக ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா தரப்பிலிருந்து 3 வாரங்களுக்குள் தேர்தல் ஆணையத்தில் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

பதில்மனு தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து அடுத்த நான்கு வாரங்களில் இதுகுறித்த விசாரணையை தேர்தல் ஆணையம் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon