மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

தொடர் மின்தடை: தீப்பந்தம் ஏற்றி போராட்டம்!

தொடர் மின்தடை: தீப்பந்தம் ஏற்றி போராட்டம்!

வேதாரண்யம் அருகே உள்ள கிராமத்தில் தொடர் மின்தடை ஏற்படுவதாகக் கூறி, நேற்றிரவு தீப்பந்தம் ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தென்னடார் கிராமம் கடற்கரையை ஒட்டி அமைத்துள்ளது. இங்கு, கீழக்காடு பகுதியில் விநியோகிக்கப்படும் மின்சாரம் குறைந்த மின்அழுத்தம் கொண்டதாக உள்ளதால், இரவில் தொடர்ந்து மின்தடை ஏற்படுவதாகத் தென்னடார் கிராம மக்கள் வருத்தம் தெரிவித்து வந்தனர்.

இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், மின் துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அக்கிராம மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் தங்கள் பகுதிக்கு மின்மாற்றி அமைத்து மின்சாரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்று (செப்டம்பர் 12) அக்கிராம மக்கள் வீதிகளில் தீப்பந்தம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று, செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்திருந்தார் தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி. அதே நேரத்தில், காற்றாலை மின்சாரம் குறைந்ததால் சில இடங்களில் அரைமணி நேரம் மட்டும் மின்வெட்டு இருந்ததாகக் கூறியிருந்தார். இந்த நிலையில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் தீப்பந்தம் ஏற்றி, தங்கள் எதிர்ப்பை தமிழக மின் துறைக்குத் தெரிவித்துள்ளனர்.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon