மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

2.o: தொழில்நுட்பத்துக்கு எதிரான போரா?

2.o: தொழில்நுட்பத்துக்கு எதிரான போரா?

ரஜினி நடித்துள்ள 2.o படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றுவருகிறது.

விஞ்ஞானி வசீகரனுக்கும் சிட்டி ரோபோட்டுக்கும் நடக்கும் சண்டைதான் எந்திரன் படத்தின் முக்கிய கட்டம். ஹீரோ, வில்லன் என இரு கதாபாத்திரங்களிலும் ரஜினி நடித்திருந்தார். ஆரம்பகாலங்களில் வில்லன் நடிகராக அறிமுகமாகியிருந்த அவர் மீண்டும் அந்த பாத்திரம் ஏற்றது ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. ‘பிளாக் சிப்’எனக்கூறிக்கொண்டு ஆடு போல் கத்தி அவர் செய்த அட்டகாசங்கள் திரையரங்குகளை அதிரச்செய்தன. இறுதியில் வசீகரன் ஜெயித்து சிட்டியின் பாகங்கள் பிரிக்கப்பட்டு அருங்காட்சியகத்தில் வைப்பதோடு முதல் பாகம் நிறைவடைந்தது.

சிட்டி உயிர்பெறுவதற்கான சூழல் உருவாகுவதில் இருந்து 2.o படத்தின் திரைக்கதை தொடங்குகிறது. ஒரே நேரத்தில் அனைவரது மொபைல் போன்களும் பறந்துபோகின்றன. லட்சக்கணக்கான செல்போன்களைக் கொண்டு உருவான புது உருவம் நகரை தாக்கத் தொடங்குகிறது. அது அக்‌ஷய் குமார் கதாபாத்திரம். அறிவியலுக்கு அப்பாற்பட்ட விதத்தில் நடக்கும் இந்த பிரச்சினையில் இருந்து மக்களை மீட்க சிட்டி ரோபோவின் உதவியை நாடுகின்றனர்.

செல்போன் டவரைச் சுற்றி கழுகு கூட்டமாய் சுற்றுவதில் இருந்து டீசர் தொடங்குவது, மொபைல் போன்கள் கொண்டே தனக்கான உருவத்தை அக்‌ஷய் குமார் கதாபாத்திரம் அமைத்துக்கொள்வது, கழுகின் தோற்றமெடுப்பது, இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல என்ற வாசகம் இடம்பெறுவது ஆகியவை தொழில்நுட்பவளர்ச்சியால் பாதிக்கப்பட்ட பறவைகளின் பழிவாங்கலாக இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

பிரம்மாண்டத்திற்குக் குறைவில்லாமல் கிராபிக்ஸ் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆடு போல் முதல் பாகத்தில் குரல் கொடுத்த ரஜினி ‘குக்கூ..’ என இந்த பாகத்தில் கூறுகிறார். ஐஸ்வர்யா ராய்க்கு பதிலாக இந்த பாகத்தில் ஏமி ஜாக்சன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் டீசர் வெளியாகியுள்ள நிலையில் சில மணிநேரங்களில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது.

2.o டீசர்

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon