மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 27 மே 2020

புதிய 'தூய்மை இந்தியா' திட்டம் யாருக்கானது?

புதிய 'தூய்மை இந்தியா' திட்டம் யாருக்கானது?

மகாத்மா காந்தியின் 150 பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, வரும் 15ஆம் தேதி புதிய தூய்மைத் திட்டத்தை தொடங்க இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். ‘தூய்மையே உண்மையான சேவை’ இயக்கத்தின் பகுதியாக ஒவ்வொருவரும் மாற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ’தூய்மை இந்தியா’ திட்டத்தின் நிலைமை என்ன ஆனது என்பதே தெரியாத நிலையில், இந்தப் புதிய தூய்மைத் திட்டம் தற்போது யாரை ஏமாற்றுவதற்காகக் கொண்டுவரப்பட்டது என்று சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

ஏனெனில், ’தூய்மை இந்தியா’ திட்டம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் இந்நிலையில் சுகாதார மேம்பாட்டில் இந்தியா அப்படியேதான் இருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுவும், கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2015க்குப் பிறகு அதிகரிக்கவே செய்திருக்கிறது என்று அரசாங்க அறிக்கையே சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட கழிப்பறை கட்டும் திட்டத்தில் மிகப் பெரிய ஊழல் நடந்தது வெளிச்சத்துக்கு வந்ததும், இந்தத் திட்டம் உண்மையிலேயே எதற்காகக் கொண்டுவரப்பட்டது என்ற கேள்வியை எழுப்பியது.

இந்நிலையில், “வரும் அக்டோபர் 2-ம் தேதி மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த ஆண்டு தொடங்குகிறது. தூய்மை இந்தியா என்கிற காந்தியின் கனவை நனவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க மக்கள் இயக்கமான தூய்மை இந்தியா இயக்கத்தின் நான்காவது ஆண்டு நிறைவு நாளாகும். தூய்மை இந்தியாவுக்காகப் பாடுபட்ட அனைவரையும் நான் வணங்குகிறேன். ” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

15ஆம் தேதி நடக்கவிருக்கும் நிகழ்வு குறித்துப் பேசும்போது, “‘தூய்மையே உண்மையான சேவை இயக்கம்’ வரும் 15ஆம் தேதி தொடங்குகிறது. இது காந்தி அவர்களுக்கு நாம் செலுத்தும் மகத்தான அஞ்சலியாகும். தூய்மை இந்தியாவை உருவாக்கும் முயற்சிகளை வலுப்படுத்தவும், இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாகவும் இருக்க முன்வாருங்கள். 'தூய்மையே உண்மையான சேவை இயக்கத்தின்’ தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், 15ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நாம் அனைவரும் ஒன்று கூடுவோம். தூய்மைக்கான செயல்பாடுகள், தொடங்கியபின், தூய்மை இந்தியா இயக்கம் வலுப்பட மிகுந்த ஈடுபாட்டுடன் களப் பணியாற்றியவர்களுடன், கலந்துரையாடும் தருணத்தை நான் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன்” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

‘தூய்மை இந்தியா’ திட்டத்தைப் போல ‘ தூய்மையே உண்மையான சேவை’ எனும் இந்த இயக்கமும் பெரளவில் இல்லாமல், ஏதாவது சமூக மாற்றத்தை ஏற்படுத்துமானால், வரவேற்கலாம்.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon