மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

புரோமோஷனில் ‘கெத்து’ காட்டும் விஜய் சேதுபதி

புரோமோஷனில் ‘கெத்து’ காட்டும் விஜய் சேதுபதி

செக்கச்சிவந்த வானம் படத்தின் புரோமோ வீடியோ ஒன்று நேற்று (செப்டம்பர் 12) வெளியாகியுள்ளது.

திரையில் தோன்றியவுடன் ரசிகர்களின் கரவொலி கேட்கும் நடிகராக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. நடிகர்களைப் போலவே சில இயக்குநர்களும் தங்களுக்கான ரசிகர்களைப் பெற்றுள்ளனர். ஒவ்வொரு படம் அறிவிக்கும்போதும் அவர்களது படங்களுக்கு எதிர்பார்ப்பு இருப்பதையும் பார்க்கலாம். அத்தகைய இயக்குநர்களின் பட்டியலில் முன்னணி இடத்தில் இருப்பவர் மணிரத்னம். விஜய் சேதுபதி - மணிரத்னம் காம்போவில் ஒரு படம் வராதா என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக நட்சத்திரப் பட்டாளத்துடன் வருகிறது செக்கச்சிவந்த வானம்.

திட்டமிட்டதற்கு ஒருநாள் முன்பாக செப்டம்பர் 27ஆம் தேதி படத்தை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்துக்கான புரொமோஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் விஜய் சேதுபதியின் ரஸுல் கதாபாத்திரம் தொடர்பான வீடியோ ஒன்றைப் படக்குழு ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

விக்ரம் வேதாவில் காவல் துறையை அலறவிடும் ரவுடியாக வந்த விஜய் சேதுபதி இந்தப் படத்தில் காவல் துறை அதிகாரியாக வந்து கவர்கிறார். அவரது காட்சிகள் படமாக்கப்பட்ட விதத்தை வீடியோவில் காணலாம். இந்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுவரும் நிலையில் அரவிந்த் சாமி, சிம்பு, அருண் விஜய் ஆகியோர் நடித்த காட்சிகளும் அவை உருவான விதமும் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon