மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 19 ஜன 2020

கன்னியாஸ்திரி விவகாரம்: பார்வதி கண்டனம்!

கன்னியாஸ்திரி விவகாரம்: பார்வதி கண்டனம்!

கேரள மாநிலம் கன்னியாஸ்திரி விவகாரம் தொடர்பாக, பிஷப்புக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்த எம்எல்ஏவைக் கடுமையாக விமர்சித்துள்ளார் நடிகை பார்வதி.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில், பிராங்க முல்லக்கால் என்பவர் பிஷப்பாக இருக்கிறார். இவர் அங்கு பணிபுரியும் கன்னியாஸ்திரியை, 2014 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இவர் மீது காவல் துறையும், தேவாலய நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஐந்து கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில், பிஷப்புக்கு ஆதரவாக பேசிய சுயேட்சை எம்எல்ஏ பி.சி.ஜார்ஜ் என்பவர், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியை மோசமாக விமர்சித்தார். இதற்குப் பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்தன. அவருக்கு எதிராக சமூக வலைதளங்களிலும் எதிர்ப்புகள் வலுத்துள்ளன.

இந்நிலையில், நடிகை பார்வதியும் அந்த எம்எல்ஏவைக் கடுமையாக விமர்சித்துக் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இந்த பிரச்சாரம் பெருமையாக இருக்கிறது. இந்த மனிதனின் வெறுக்கத் தகுந்த வாந்தியைப் பற்றி பேசியது போதும். கன்னியாஸ்திரிகளின் தைரியத்துக்கு சல்யூட்” என்று தெரிவித்துள்ளார்.

இதே போல், இந்தி நடிகை ரவீண்டா டாண்டனும் ஜார்ஜுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்துள்ளார். “இது போன்ற வார்த்தைகள் பாதிக்கப்பட்டவரைக் கண்டு பயத்தில் வெளிவருவது. தேசிய மகளிர் ஆணையம் இதில் களமிறங்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், இதுபற்றி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் ஜார்ஜுக்கு சம்மன் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து, தான் உணர்ச்சிவசப்பட்டு அப்படிக் கூறிவிட்டதாக ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon