மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 19 ஜன 2021

மல்லையா சந்திப்பு: ஜேட்லி பதவி விலக வேண்டும்!

மல்லையா சந்திப்பு: ஜேட்லி பதவி விலக வேண்டும்!

9 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு பறந்துவிட்ட தொழிலதிபர் விஜய் மல்லையா- மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்துவிட்டே லண்டன் சென்றதாக நேற்று தெரிவித்தார்.

இதற்கு அருண் ஜேட்லி மறுப்பு தெரிவித்த நிலையில், அருண் ஜேட்லி தனது நிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடியின் ஆட்சிக் காலம் முடியும் தருவாயில் மத்திய அரசுக்கு அடுத்தடுத்த சிக்கல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. வாராக் கடன் மோசடியாளர்கள் பற்றிய பட்டியலை 2016 ஆம் ஆண்டே பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியும் நடவடிக்கை இல்லை என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் விஜய் மல்லையா மூலமாக அடுத்த சர்ச்சை வெடித்துள்ளது.

மல்லையா மீதான நிதி மோசடி வழக்குகளை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், லண்டலில் இருக்கும் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டிலும் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நடந்தபிறகு கோர்ட் வளாகத்தில் தனது நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்த விஜய் மல்லையா,

’2016 ஆம் ஆண்டு நான் இந்தியாவில் இருந்து லண்டன் புறப்படும் முன்பாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்தேன். நிலைமையை சரி செய்ய முயற்சித்தேன்’’ என்று தெரிவித்திருந்தார். இது பத்திரிகையாளர்கள் மூலமாக பரவியவுடன் இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதற்கு அருண் ஜேட்லி அளித்த விளக்கத்தில், “நாடாளுமன்றத்தில் ஒரு நாள் நான் என் அறைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போது சில நிமிடங்கள் மல்லையா எதிர்ப்பட்டார். பிரச்னைக்கு தீர்வு காணுமாறு என்னிடம் கோரினார். நான் என்னை பார்ப்பதை விட சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் சென்று பேசுங்கள் என்று சொன்னேன். அது திட்டமிட்ட சந்திப்பு கிடையாது. நாடாளுமன்ற வளாகத்தில் எதேச்சையாக நடந்த விஷயம். அதை அவர் தவறாகப் பயன் படுத்துகிறார்” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், “லண்டனில் விஜய் மல்லையா தெரிவித்திருக்கும் விஷயம் மிகத் தீவிரமானது. இந்தியாவின் நிதி அமைச்சர் ஜேட்லி மீதான புகார்கள் மிகத் தீவிரமாகின்றன. பிரதமர் உடனடியாக இதில் தலையிட்டு சுதந்திரமான விசாரணை நடத்தப்பட உத்தரவிட வேண்டும். அருண் ஜேட்லி தன் மீதான விசாரணை நடப்பதற்கு ஏதுவாக தனது மத்திய அமைச்சர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

ரபேல் விவகாரத்தில் நிர்மலா சீதாராமன், மல்லையா விவகாரத்தில் அருண் ஜேட்லி, ரகுராம் ராஜன் தெரிவித்த புகாரின்படி பிரதமர் அலுவலகம் என ஒட்டுமொத்த மத்திய அரசும் ஊழல் புகாரில் சிக்கியிருப்பது குறிப்பிடத் தக்கது.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon