மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 6 ஏப் 2020

தமிழகத்தில் சிறப்பு நீதிமன்றம்!

 தமிழகத்தில் சிறப்பு நீதிமன்றம்!

எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிகளின் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க தமிழக அரசு சிறப்பு நீதிமன்றம் அமைத்துள்ளது என நேற்று(செப்-12) தமிழக அரசின் அதிகார வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2017 டிசம்பர் 14ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களின் மீதான வழக்குகளை விசாரிக்க நாடு முழுவதும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவிட்டது. இந்த நீதிமன்றங்கள் விரைவு நீதிமன்றங்களாக செயல்பட்டு வழக்குகளை விசாரித்து முடிக்கும். இந்த உத்தரவுகளை 11 மாநிலங்கள்தான் செயல்படுத்தின. இன்னும் 25 மாநிலங்கள் செயல்படுத்தவில்லை. நேற்று கூடிய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவுகளை அமல்படுத்தாத மாநிலங்களை கடுமையாக கண்டித்தது. இந்நிலையில் தமிழக அரசு நேற்று சிறப்பு நீதிமன்றங்களை அமைத்துள்ளது. இந்நீதிமன்றங்கள் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் மீதான வழக்குகளை விரைவு நீதிமன்றங்களாக செயல்பட்டு விசாரித்து தீர்ப்பு வழங்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக தமிழக அரசின் மூத்த அதிகாரி ஒருவர் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் மீதான வழக்குகளை இந்நீதிமன்றங்களுக்கு மாற்றும் பணியானது நடந்து வருகிறது. இந்த நீதி்மன்றம் அமைக்கப்படும் இடமானது விரைவில் இறுதி செய்யப்படும்.எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வக்காலத்து மனுவில் தமிழகத்தில் 178 எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிகள் மீது குற்றவியல் வழக்குகளுக்கான விசாரணைகள் நடந்து வருகின்றன.324 வழக்குகள் அவர்கள் மீது தொடரப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு 9 மாத காலத்திற்கு பின்னரே தமிழக அரசு சிறப்பு நீதிமன்றத்தை அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon