மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 அக் 2019

மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்க வேண்டும் : ராமதாஸ்

மதிப்புக் கூட்டு வரியைக்  குறைக்க வேண்டும் : ராமதாஸ்

பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியைத் தமிழக அரசு குறைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இது பல்வேறு தரப்பினரையும் பெரிதும் பாதித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையைத் தமிழக அரசு குறைக்க முடியாது, மத்திய அரசு தான் குறைக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (செப்டம்பர் 13) வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் உயர்ந்து ரூ. 84.19 ஆகவும், டீசல் விலை 12 காசுகள் உயர்ந்து ரூ.77.25 ஆகவும் உள்ளன.

பெட்ரோல், டீசல் மீதான வரிகளால் மத்திய அரசை விட, அதிக வருவாய் ஈட்டுவது மாநில அரசு தான். இன்றைய நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு வசூலிக்கும் கலால் வரி முறையே ரூ.19.48, ரூ.15.33 மட்டும் தான்.

ஆனால், தமிழக அரசுக்கோ ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.21.36, ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.15.45 வீதம் மதிப்புக் கூட்டு வரி கிடைக்கிறது. இது தவிர மத்திய அரசு வசூலிக்கும் கலால் வரியில், மாநில அரசின் பங்காக பெட்ரோலுக்கு ரூ.8.18, டீசலுக்கு ரூ.6.47 கிடைக்கிறது.

ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டால் ரூ.29.54, டீசல் விற்கப்பட்டால் ரூ.21.92 வரியாகக் கிடைக்கிறது. அதாவது பெட்ரோல், டீசல் விலையில் மூன்றில் ஒரு பங்கு மாநில அரசுக்கு வருவாயாகக் கிடைக்கும் நிலையில், எரிபொருட்களின் மீதான வரியைக் குறைத்து விலையைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று முதல்வர் கூறுவது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் செயல்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

“தமிழகத்தில் பெட்ரோல் மீது 34 விழுக்காடும், டீசல் மீது 25 விழுக்காடும் மதிப்புக் கூட்டு வரியாக வசூலிக்கப்படுகிறது. 2017ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி வரை இது முறையே 27 விழுக்காடாகவும், 21.40 விழுக்காடாகவும் தான் இருந்தது. மதிப்புக்கூட்டு வரி உயர்த்தப்படுவதற்கு முன்பு வரை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மதிப்புக் கூட்டு வரியாக ரூ.14.58, டீசலுக்கு ரூ.10.48 மட்டுமே கிடைத்து வந்தது. அதன்பின் வரி உயர்த்தப்பட்டதால் இது முறையே ரூ.18.36, ரூ.12.32 ஆக உயர்ந்தது.

கடந்த மார்ச் - ஏப்ரல் மாதம் வரை இதே அளவில் தான் வரி வருவாய் கிடைத்து வந்தது. கடந்த ஒரு மாதமாக எரிபொருட்களின் விலை தொடர்ச்சியாக உயர்ந்ததன் விளைவாகத் தான் பெட்ரோல், டீசல் மீதான வரி வருவாய் ரூ..21.36, ரூ.15.45 என அதிகரித்திருக்கிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மதிப்பு கூட்டு வரி உயர்த்தப்படுவதற்கு முன் தமிழக அரசுக்குக் கிடைத்த வருவாயை விட பெட்ரோலுக்கு ரூ.6.78, டீசலுக்கு ரூ.4.97 கூடுதலாகக் கிடைக்கிறது. இந்தக் கூடுதல் லாபத்தைக் குறைத்தால் தமிழக அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படாது. இந்த அளவுக்கு விலையைக் குறைத்த பிறகும் கூட, மத்திய அரசின் வரி வருவாயிலிருந்து கிடைக்கும் பங்கையும் சேர்த்து, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 22.76 ரூபாயும், ஒரு லிட்டர் டீசலுக்கு 16.95 ரூபாயும் தமிழக அரசுக்கு வரி வருவாயாகக் கிடைக்கும்.

எனவே, தமிழக அரசு பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டு வரியை ரூ.6.78 அளவுக்கும், டீசல் மீதான வரியை ரூ.4.97 அளவுக்கும் குறைக்க வேண்டும்” என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon