மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 29 மே 2020

யுத்தம் தமிழர்களுக்கு எதிரானது அல்ல: ராஜபக்சே

யுத்தம் தமிழர்களுக்கு எதிரானது அல்ல: ராஜபக்சே

இலங்கையில் நடைபெற்ற யுத்தம் தமிழர்களுக்கு எதிரானது அல்ல, விடுதலைப் புலிகளுக்கு எதிரானது மட்டுமே என்று அந்நாட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே கடந்த திங்களன்று இந்தியா வந்தார். நேற்று பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசினார். பாஜக எம்.பி. சுப்ரமணியன் சாமி விராத் இந்துஸ்தான் சங்கம் என்ற அமைப்பை கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்படுத்தினார். இந்த அமைப்பின் சார்பில் டெல்லியில் நேற்று(செப்டம்பர் 12) நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜபக்சே கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், “2009ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தம் என்பது தீவிரவாதத்திற்கு எதிரானது, தமிழர்களுக்கு எதிரானது அல்ல. நாங்கள் எப்போதுமே இனவாத யுத்தத்தில் ஈடுபடவில்லை. விடுதலைப் புலிகளின் செயல்பாடுகள் இலங்கையைக் கடந்து இந்தியா வரை பரவியதை நாம் மறந்துவிடக்கூடாது. தீவிரவாதத்தை அழிப்பது என்பது ஒரு இனத்திற்கோ அல்லது ஒரு நாட்டிற்கோ மட்டும் நன்மையல்ல. யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் 3 லட்சம் தமிழர்களை ராணுவம் மீட்டது. 40 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டனர் என்று கூறப்படுவது பொய். பலியானவர்களின் எண்ணிக்கை மொத்தமாக 8 ஆயிரத்துக்கு மேல் இருக்காது” என்று தெரிவித்தார்.

முன்னதாக ராஜபக்சேவை அறிமுகப்படுத்திப் பேசிய சுப்ரமணிய சாமி, “இலங்கையில் அடுத்து அரசமைப்பதில் முன்னணியில் ராஜபக்சே உள்ளார். அவர் விரைவில் அதிபராவார். தீவிரவாதத்திற்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கைகள் எடுத்து நாட்டை சுத்தப்படுத்தினார். இதன் விளைவாக, இன்று இலங்கை சர்வதேச முதலீட்டுக்கு சாதகமாக உள்ளது” என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை ராஜபக்சே இன்று (செப்டம்பர் 13) சந்தித்துப் பேசினார்.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon