மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 26 மே 2020

கேரளா: நீர்மட்டம் குறித்து ஆய்வு!

கேரளா: நீர்மட்டம் குறித்து ஆய்வு!

கேரளாவில் மழை வெள்ளத்துக்குப் பிறகு நீர்நிலைகள், கிணறுகளில் குறையும் நீர் மட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பெய்த பெருமழையினால், கேரளாவில் உள்ள 12 மாவட்டங்களில் மழை வெள்ளம் புகுந்து வெள்ளக்காடாகக் காட்சியளித்தன. மக்கள் தங்கள் உடைமைகளையும், வீடுகளையும் இழந்து தவித்தனர். ஒரு மாத காலத்திற்குப் பிறகு, தற்போது தான் கேரளாவில் வெயில் முகம் பட ஆரம்பித்துள்ளது. ஆனால், சமீப நாட்களாக வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது.

தற்போது கேரளாவிலுள்ள ஆறுகள், கிணறுகள் திடீரென வறட்சியடையத் தொடங்கியுள்ளன. கிணறுகளில் நிலத்தடி நீர் குறைந்து வருகிறது; வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய கேரளாவின் முக்கிய ஆறுகளான பெரியாறு, பாரதப்புழா, பம்பை ஆகிய நதிகளில் தண்ணீரின் அளவு குறைவாகவே உள்ளது.

வெள்ளத்தின்போது கடுமையாகப் பாதிக்கப்பட்ட இடுக்கி, வயநாடு போன்ற மாவட்டங்களில் வெப்பமும் வறட்சியும் அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் அரசின் வேளாண்மைத் துறைக்குத் தகவல் கொடுத்ததையடுத்து, நிபுணர்கள் அப்பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், கேரளாவில் ஏற்பட்டுள்ள வறட்சி குறித்து ஆய்வு செய்ய மத்திய நீர்வள மேலாண்மை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். “பல்லுயிர் பெருக்கத்தைச் சீரமைக்க கேரள வனத் துறை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். வறட்சிக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய மாநில அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் கவுன்சிலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என அவர் கூறினார்.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon