நடிகர் சிவகார்த்திகேன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சீமராஜா’ திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி புதிய கெட்டப்பில் நடித்துள்ளார்.
1999ஆம் ஆண்டு நினைவிருக்கும் வரை என்ற படத்தின் மூலம் திரைக்கு வந்தவர் நடிகர் சூரி. அதற்குப் பின்பு 10 ஆண்டுகள் கழித்து வெண்ணிலா கபடி குழு படத்தின் பரோட்டா உண்ணும் காட்சி மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். அன்றிலிருந்து சூரி என்ற அவரது பெயர் பரோட்டா சூரியாக மாறியது.
சிவகார்த்திகேயன்-சூரி காம்போவில் வெளியான அனைத்துப் படங்களுமே ஹிட் அடித்த நிலையில் பல முன்னணி நடிகர்களுடன் நகைச்சுவை நாயகனாக இணைந்தார் சூரி. அதில் ‘அரண்மனை–2’, ‘மருது’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, உள்பட இவர் கதாநாயர்களுடன் கைகோர்த்த படங்கள் அனைத்தும் பேசப்படும் படங்களாகவே அமைந்துள்ளன.
பொதுவாக பாலிவுட் படங்களின் நகைச்சுவை நடிகர்கள், கதாநாயகனுக்கு ஏற்றார் போல் உடலமைப்பும், தோற்றமும் கொண்டிருப்பார்கள். அதே போல் தற்போது சூரியும் சிக்ஸ்பேக் வைத்து மாறியிருக்கிறார். இவர் நடித்த சீமராஜா திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சூரி சிக்ஸ்பேக் தோற்றத்துடன் வருவதாகப் படக்குழுவினர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். இருப்பினும் சூரியின் சிக்ஸ்பேக் உடலமைப்பு குறித்த புகைப்படங்களை இதுவரை வெளியிடாமல் ரகசியமாக வைத்திருந்தனர்.
தற்போது இந்தப் புகைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்காக அவர் 8 மாதங்களாக கடின உடற்பயிற்சி செய்ததாகவும், இந்த புகைப்படத்தை பகிர்வதில் தனக்கு மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்படத்திற்கு நடிகை சிம்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் , ``இதுதான் உண்மையான கடின உழைப்பு’’ என்று சூரியை பாராட்டியுள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலம் ரம்யா, " அண்ணா வேற லெவல் போங்க" என்று குறிப்பிட்டுள்ளார்.