மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 13 ஆக 2020

அமைச்சரவைக் கூட்டத்தில் காரசார மோதல்!

அமைச்சரவைக் கூட்டத்தில் காரசார மோதல்!

கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூடியது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுதலை செய்யுமாறு ஆளுநருக்குப் பரிந்துரை செய்வதற்காகத் தீர்மானம் இயற்றப்பட்டது என்று அமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதேநேரம் அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரத்தை விடவும் முக்கியமாகப் பேசப்பட்டது அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் பற்றியும் அமைச்சர்களின் நடவடிக்கைகள் பற்றியும்தானாம். இதுபற்றி அமைச்சரவையில் காரசாரமான வாதங்களும் நடந்ததாகச் சொல்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

என்னவென்று விசாரித்தோம்.

“அலுவலக ரீதியாக அமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும் அதிகாரிகளை அனுப்பிவிட்டுக் கொஞ்ச நேரம் அமைச்சர்களுடன் உரையாடியிருக்கிறார் முதலமைச்சர். அப்போதுதான் ஊழல் புகார்கள் பற்றிய விவாதம் நடந்திருக்கிறது. தொடக்கத்திலேயே முதல்வர் பழனிசாமி மன வருத்தத்துடன் பேசத் தொடங்கினார்.

‘அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்துவருகிறது, மத்தியிலிருந்தும் சில அமைச்சர்கள் பெயர்களைக் குறிப்பிட்டும் சொல்றாங்க. நானும் உங்களைக் காப்பாத்தணும்தான் நினைக்கிறேன். கட்சியும் ஆட்சியும் பலமாக இருந்தாதான் நமக்கு நல்லது. ஆனா, பலரும் கட்சியைக் கண்டுக்கறதே இல்லை’ என்றார் முதல்வர்.

அப்போது அமைச்சர் சி.வி.சண்முகம், ‘கட்சியைக் கண்டுக்கறதில்லைன்னா... என்ன சொல்ல வர்றீங்க. ஒவ்வோர் அமைச்சர் மேலயா புகார் சொல்லுவாங்க. அதையெல்லாம் கேட்டுக்கிட்டு நடவடிக்கை எடுக்கணுமா?’ என்று கேட்டிருக்கிறார்.

புகாருக்கு உள்ளான விஜயபாஸ்கரும், ‘மத்திய அரசு சொல்றது இருக்கட்டும். நம்மகிட்ட உள்ளவங்களே நமக்கு எதிராக இருக்காங்களே...’ எனக் கூறினார்.

இப்படியாக வாதப் பிரதிவாதங்கள் தொடர ஒருகட்டத்தில் அமைச்சர் வேலுமணி எழுந்து, ‘அண்ணே அபீசியலா மீட்டிங் முடிஞ்சிடுச்சுல்ல... நான் கிளம்பறேன்’ என்று எழுந்து வெளியே செல்ல முனைந்திருக்கிறார். மற்ற அமைச்சர்கள் அவரை அமர வைத்திருக்கிறார்கள். அப்போது பேசிய வேலுமணி, ‘முதல்வரைப் பார்த்து எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தால் அவர்கள் சொல்பவரையெல்லாம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சொல்வீங்களா? அப்படியென்றால் யார் மீதுதான் குற்றச்சாட்டுகள் இல்லை’ என்று துணைமுதல்வரைக் குறிவைத்து பேசியுள்ளார்.

எதிராகப் பேசும் அமைச்சர்களை அமைதியாக்கும் அளவில் பேசிய முதல்வர் பழனிசாமி, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தைப் பார்த்து கொஞ்சம் கடுமையாகவே பேசினார்.

‘உங்க மாவட்டத்தில் சொந்தக் கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் அனைவரும் உங்களுக்கு எதிராக இருக்கிறார்கள். ஏற்கெனவே உங்களாலதான் ஓர் எம்.எல்.ஏ, தினகரன் பக்கம் போயிட்டார். இன்னும் இருக்கிறவர்களையும் அனுப்பிவிடலாம் என்று பார்க்கறீங்களா? அவர்களோடு இணக்கமாகயிருந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள ஏன் உங்களுக்குத் தெரிய மாட்டேங்குது?’ என்று கோபமாகவே பேசினார்.

ஆனால் அலட்டிக் கொள்ளாத அமைச்சர் சம்பத், ‘அவங்களுக்கு எப்போதும் இதே வேலைதான். அம்மா இருக்கும்போதும் இதேதான் செய்தார்கள். இப்போதும் அதையே செய்கிறார்கள்’ என்று கூலாகச் சொல்லியிருக்கிறார். .

அதிமுக அமைச்சர்கள் ஜெயலலிதா இருந்தபோது அமைச்சர்கள் கூட்டத்தில் பூனைபோல் இருந்தவர்கள் இன்று அதே அமைச்சர்கள் முதல்வரை மிரட்டுவதுபோல் பேசி கூட்டத்தை வெளிநடப்பு செய்யும் அளவுக்குக் களேபரம் செய்துள்ளார்கள்.

மக்கள் பார்வைக்கு ஏழு பேரை விடுதலை செய்வதற்கான அமைச்சரவை அவசரக் கூட்டம் என்றாலும், உள்ளே முழுக்க நடந்தது அமைச்சர்களை ஒழுங்குபடுத்தும் வேலையும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான கூட்டம்தான்” என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon