2.O திரைப்படத்தின் பட்ஜெட் ஹாலிவுட் படங்களின் பட்ஜெட்டுக்கு நிகராக பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.O’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு ஒரு வருடத்துக்கு முன்பே முடிந்து தொழில்நுட்பப் பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கெனவே படம் வெளியாகும் தேதிகளை அறிவித்துத் தள்ளிவைத்த நிலையில் தற்போது நவம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என உறுதிபடுத்தியுள்ளனர்.
கிராபிக்ஸ் பணிகள் முடியாததே தாமதத்துக்குக் காரணம் என்றனர். வெளிநாட்டு ஸ்டுடியோக்களில் கிராபிக்ஸ் வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் 2.O படத்தின் ட்ரெய்லர் இன்று இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் குறிப்பிட்ட திரையரங்குகளில் 3டியில் வெளியாகும் என்றும் அதே நேரத்தில் யூடியூப்பில் 2டியில் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளனர். 2.O படத்தின் ட்ரெய்லரைத் தணிக்கை செய்யும்போது பார்த்த ஒருவர் பாகுபலியை மிஞ்சுவதாக உள்ளது என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தப் படம் ரூ.450 கோடி செலவில் தயாராவதாக ஏற்கெனவே கூறப்பட்டது. ஆனால், படத்தின் செலவு குறித்த புதிய போஸ்டரை படக்குழுவினர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் இந்தியாவிலேயே முதன்முறையாக வி.எஃப்.எக்ஸ் தொழில்நுட்பத்தில் 75 மில்லியன் டாலர் செலவிடப்பட்ட படம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய பணமதிப்பில் 75 மில்லியன் டாலர் என்பது ரூ.542 கோடிக்கு அதிகம். இதனால் வியந்து போன ரசிகர்கள் அந்த போஸ்டரை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள். இயக்குநர் ஷங்கரும் தனது ட்விட்டரில் 2.O படத்தில் பிரமாண்டத்தை கொண்டுவர 3 ஆயிரம் தொழில்நுட்பக் கலைஞர்கள் உழைத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
எக்ஸ் - மென் என்ற பெயரில் 2000ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படத்தின் வி.எஃப்.எக்ஸ் செலவும் 75 மில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 1989 ஆண்டு வெளிவந்த பேட்மேன் படத்தின் வி.எஃப்.எக்ஸ் செலவு 35 மில்லியன் டாலராகும். இவ்விருப்படங்களும் வி.எஃப்.எக்ஸ்ஸுக்காக பெரிதாகப் பேசப்பட்ட படங்களாகும். இதன் மூலம் இந்தியாவில் அதிக பட்ஜெட்டில் படம் எடுத்த இயக்குநர் பட்டியலில் , ராஜமவுலியைப் பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார் ஷங்கர்.
இதுகுறித்து இந்தப் படத்தில் நடித்துள்ள அக்ஷய் குமார் ஐஏஎன்எஸ்ஸுக்கு அளித்துள்ள பேட்டியில், “உண்மையிலேயே ரஜினி சார் ஒரு சூப்பர் ஸ்டார். இந்தப் படத்தில் ரஜினி சாருடன் இணைந்து நடிப்பதற்கு வாய்ப்பளித்த ஷங்கர் சாருக்கு நன்றி. 2.O போன்ற ஒரு பிரமாண்டமான விலை உயர்ந்த படத்தில் வேலை செய்வேன் என்று கற்பனை கூட செய்து பார்த்ததில்லை. பாலிவுட்டில் 130 படங்கள் நடித்துவிட்டேன். 2.O, 131ஆவது திரைப்படம். மற்ற படங்களில் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றேன். ஆனால் 2.O படத்தில் படம் முழுக்க கற்றுக் கொண்டேன்” என்று கூறியுள்ளார்.