மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

சிறப்புக் கட்டுரை: மற்றவர்கள் மீது பழி சுமத்தும் அரசு!

சிறப்புக் கட்டுரை: மற்றவர்கள் மீது பழி சுமத்தும் அரசு!

ரோஹன் வெங்கடராமகிருஷ்ணன்

நிதி ஆயோக்கின் துணைத் தலைவராக 2017ஆம் ஆண்டில் ராஜிவ் குமார் நியமிக்கப்பட்டது முதலாகவே, அவரது துறை சார்ந்த மற்றவர்கள் குறித்து கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

இந்தியாவின் கொள்கை உருவாக்கத்தில் ஆங்கில-அமெரிக்க ஆதிக்கம் குறித்து வருந்தும் ராஜிவ் குமார், தனது பொறுப்பில் முன்பிருந்த அரவிந்த் பனகாரியாவையும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜனையும் விமர்சித்துள்ளார். அவர்கள் இருவரும் இந்தியத் துணைக் கண்டத்தின் உண்மை நிலையை உணராத வெளிநாட்டவர் என்றும், அவர்கள் இந்தியாவுக்குப் பொறுப்புடன் பணியாற்றவில்லை என்றும் ராஜிவ் குமார் உதாரணம் காட்டுகிறார்.

செப்டம்பர் 3ஆம் தேதியன்று பொறுப்புடைமைக்கு ஓர் உதாரணத்தை ராஜிவ் குமார் எடுத்துக்காட்டினார். பிரதமர் நரேந்திர மோடியின் தோல்வியுற்ற பண மதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பதிலாக, ரகுராம் ராஜனின் செயல்படா சொத்துக் கொள்கையே பொருளாதாரப் பின்னடைவுக்குக் காரணம் என்று ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், “2015-16ஆம் ஆண்டு முதல் வளர்ச்சி விகிதம் 9.2 விழுக்காடாக இருந்தும், பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்ததற்கு பண மதிப்பழிப்பு காரணம் அல்ல. வங்கித் துறையில் செயல்படா சொத்துகள் அதிகரித்ததனாலேயே பொருளாதார வளர்ச்சி பின்னடைவைச் சந்தித்துவிட்டது. இந்த அரசு (நரேந்திர மோடி அரசு) ஆட்சிக்கு வந்தபோது செயல்படா சொத்துகளின் மதிப்பு ரூ.4 லட்சம் கோடியாக இருந்தது. இந்த மதிப்பு 2017ஆம் ஆண்டின் மத்தியில் ரூ.10.5 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஏனெனில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜனின் தலைமையில், வாராக் கடன்களைக் கண்டறிய புதிய முறையை அவர்கள் நிறுவினார்கள்” என்று கூறியிருந்தார்.

செயல்படா சொத்துகளின் மதிப்பு உயர்ந்ததாலும், கடன் வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டதாலும்தான் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வீழ்ச்சியடைந்ததாக ராஜிவ் குமார் தெரிவித்தார். “வளர்ச்சி விகிதம் குன்றியதற்கும், பண மதிப்பழிப்புக்கும் நேரடி தொடர்பு ஏதும் இருப்பதாக நான் கருதவில்லை” என்று அவர் கூறினார். மேலும், பண மதிப்பழிப்பால் பொருளாதார வளர்ச்சி குன்றிவிட்டதாக முன்னாள் மத்திய நிதியமைச்சரான ப.சிதம்பரமும், முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங்கும் பொய்யான பரப்புரையை மேற்கொண்டுவிட்டதாக ராஜிவ் குமார் குற்றம்சாட்டினார்.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியப் பொருளாதார வளர்ச்சி குன்றியதற்கு ஜிஎஸ்டியும், பண மதிப்பழிப்பும்தான் காரணம் என்று ஏராளமான பொருளாதார வல்லுநர்கள் நம்புகின்றனர். இவர்கள் உட்பட பல தரப்பினரும் ராஜிவ் குமாரின் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

முதன்முதலாக பண மதிப்பழிப்புக்கும், பொருளாதார வளர்ச்சி சரிந்ததற்கும் இடையே தொடர்பு இருப்பதை 2017ஆம் ஆண்டில் முன்னாள் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்ரமணியன் வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்ட பண மதிப்பழிப்பு நடவடிக்கை மிக மோசமாக நிர்வகிக்கப்பட்டு, மக்களைத் துன்புறுத்தியதோடு, கடும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது. புழக்கத்திலிருந்த 86 விழுக்காடு ரூபாய் நோட்டுகள் அரசால் உறிஞ்சிக்கொள்ளப்பட்டன. எனினும், பண மதிப்பழிப்பால் ஆக்கபூர்வமான தாக்கம் ஏதும் ஏற்படவில்லை என்றே பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

அரசை ஆதரிக்கும் பொருளாதார நிபுணர்கள் சிலர், பண மதிப்பழிப்பின் பயன்கள் காலப்போக்கில் கிட்டும் என்று வாதிட்டு வந்தனர். ஆனால், மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நோட்டுகளில் பெரும்பங்கு அரசின் கைகளுக்குச் சென்றவுடன், அரசு ஆதரவு பொருளாதார நிபுணர்கள் யாவரும் அடங்கிவிட்டனர். பண மதிப்பழிப்பின் தாக்கம் இன்றளவிலும் அமைப்புசாரா துறையில் கடுமையாக இருப்பதாக இதர பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். 2016-17ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், அமைப்புசாரா தொழில்கள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களில், பண மதிப்பழிப்பின் விளைவால் மொத்த உற்பத்தியில் 7.3 விழுக்காட்டுப் புள்ளிகள் சரிந்துள்ளதாக உலக வங்கி நடத்திய கொள்கை ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்திய வங்கித் துறையின் நெருக்கடிக்குட்பட்ட சொத்துகளை நிர்வகிப்பதற்கும், பிரச்சினைகளை சரிசெய்வதற்கும் ரகுராம் ராஜனின் முயற்சிகள் அவசியமானவை என்று பல பொருளாதார வல்லுநர்களும் நம்புகின்றனர். செயல்படா சொத்துகள் உருவாக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கு முதல்படியே அவற்றைக் கண்டறிந்து ஏற்றுக்கொள்வதுதான் என்று அரவிந்த் சுப்ரமணியன் குறிப்பிட்டுள்ளார். இதைத்தான் ரகுராம் ராஜனின் சொத்து தர ஆய்வு முயற்சியும் செய்தது.

இன்னும் சொல்லப்போனால், ரகுராம் ராஜனின் முயற்சிகள் அனைத்தும் சுத்தமான முயற்சிகள் என்றும், அவற்றின் விளைவாக வங்கிகள் நேர்மையான, பொறுப்புள்ள பாதைக்குத் திரும்பும் என்று ராஜிவ் குமாரே கூறியிருந்தார். எனினும், பின்னர் அதுகுறித்து விளக்கிய ராஜிவ் குமார், தனது கருத்துகள் உண்மைகள் மற்றும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை எனவும், மக்களை அடிப்படையாகக் கொண்டவை அல்ல எனவும் விளக்கமளித்திருந்தார்.

ராஜிவ் குமாரின் கருத்துகளின் அர்த்தம் என்னவாக இருந்தாலும், அவரைப் போல பெயர்பெற்ற ஒரு பொருளாதார நிபுணரின் அங்கீகாரத்தைக் கருத்தில் கொண்டால், பணமதிப்பழிப்பின் அரசியல் தன்மை என்ன என்ற கேள்வி எழுகிறது. முதலில், ஊழல் மற்றும் கறுப்புப் பணத்துக்கு எதிரான மிகப்பெரும் முயற்சி என்று பண மதிப்பழிப்பு புகழப்பட்டது. பின்னர், உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 2017ஆம் ஆண்டு நடந்த தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி பெற்ற பெரும் வெற்றிக்கு பண மதிப்பழிப்பு ஒரு முக்கியக் காரணம் என்று கூறப்பட்டது. எனினும், இதுகுறித்து அரசு மவுனம் காத்துவிட்டது.

கடந்த சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியபோதும், பண மதிப்பழிப்பு குறித்து அவர் குறிப்பிடவில்லை. நிதியமைச்சர் அருண் ஜேட்லியோ பண மதிப்பழிப்பால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், அது ஒரு சாதனை எனவும் கூறுகிறார். ஆனால், பண மதிப்பழிப்பை மோடி அறிவித்தபோது வரி செலுத்துவோரை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்படுவதாகக் கூறவில்லை. கறுப்புப் பணத்தையும், ஊழலையும் ஒழிப்பதே பண மதிப்பழிப்பின் நோக்கமாகக் கூறப்பட்டது. ஆனால் அதனை சாதிக்க முடியவில்லை. இதிலிருந்தே பண மதிப்பழிப்பு என்ற கொள்கை தோல்வியுற்றது என்பது நிரூபணமாகிறது. ஆக, ராஜிவ் குமாரின் கருத்துகளும் கூட, பண மதிப்பழிப்பு தோல்வியுற்றுவிட்டது என்றும், தற்போதைய நிலையில், பண மதிப்பழிப்பு ஏற்படுத்திய சேதத்தைக் கட்டுப்படுத்துவதை மட்டுமே அரசால் செய்ய முடியும் என்றும் கூறுவது போன்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறது. அல்லது, பழி அனைத்தையும் வேறு ஒருவரின் மீது சுமத்துவதற்கு ராஜிவ் குமார் முயற்சி செய்வது போலத் தெரிகிறது.

நன்றி: ஸ்க்ரோல்

தமிழில்: அ.விக்னேஷ்

மின்னஞ்சல் முகவரி: [email protected]

நேற்றைய கட்டுரை:பெண்களுக்கு வாழ்வளிக்கும் காசிமேடு மீன் சந்தை!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon